சினிமா செய்திகள்
சல்மான்கானை கொல்ல முயற்சி பிரபல தாதா கைது

இந்தி நடிகர் சல்மான்கான் உயிருக்கு ஏற்கனவே அச்சுறுத்தல்கள் உள்ளன. அரிய வகை மான்களை வேட்டையாடிய சம்பவத்திலும் எதிர்ப்புகள் இருக்கிறது.
இந்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வந்து இருக்கிறார். சில சர்ச்சை படங்களில் நடித்தும் எதிர்ப்புகளுக்கு உள்ளானார். இந்தி நடிகைகள் சிலருடனும் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார்.

மிரட்டல்கள் காரணமாக சல்மான்கான் வெளிநிகழ்ச்சிகளுக்கும் பட விழாக்களுக்கும் பாதுகாவலர்கள் துணையுடனேயே வருகிறார். பொது நிகழ்ச்சிகளுக்கு வரும்போது போலீசாரும் அவருக்கு பாதுகாப்பு அளிக்கிறார்கள். இந்த நிலையில் சல்மான்கானை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்ட பயங்கர தாதாவை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கைதான தாதாவின் பெயர் சம்பத் நெஹ்ரா. அரியானாவை சேர்ந்தவன். இவன் மீது ஏராளமான கொலை மற்றும் கொலை முயற்சி, கொள்ளை, மிரட்டி பணம் பறித்தல், கடத்தல் உள்பட பல வழக்குகள் உள்ளன. இவன் சில நாட்களுக்கு முன்பு ஐதராபாத்தில் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டான்.

பின்னர் அரியானாவுக்கு அழைத்து சென்றனர். அங்கு அவனிடம் விசாரணை நடத்தியபோது சல்மான்கானை கொலை செய்ய திட்டம் தீட்டி இருந்த அதிர்ச்சி தகவல் வெளியானது. மும்பையில் உள்ள சல்மான்கான் வீட்டுக்கு சென்று அவரை எப்படி கொலை செய்வது என்று ஆராய்ந்ததாகவும் இதற்காக சல்மான்கான் நடவடிக்கைகளை 2 நாட்கள் நோட்டம் விட்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்து உள்ளான்.

இதைத்தொடர்ந்து அரியானா போலீசார் அவனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பத் நெஹ்ரா பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோ குழுவை சேர்ந்தவன் என்றும் அவன் மீது 12-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் உள்ளன என்றும் போலீசார் தெரிவித்தனர். இது இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.