சினிமா செய்திகள்
“சூர்யாவுடன் விரைவில் இணைந்து நடிப்பேன்” - பட விழாவில் கார்த்தி பேச்சு

சூர்யாவுடன் விரைவில் இணைந்து நடிப்பேன் என பட விழாவில் கார்த்தி கூறியுள்ளார்.

கார்த்தி-சாயிஷா இணைந்து நடித்துள்ள புதிய படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. பாண்டிராஜ் இயக்கி உள்ளார். சூர்யா தயாரித்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் சூர்யா கலந்துகொண்டு பேசியதாவது:-

“சத்யராஜ் நடிக்க வந்து முதல் படத்தில் வாங்கிய சம்பளத்தில் என்னை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தார். சிறுவயதில் நடந்த அந்த சம்பவத்தை என்னால் மறக்க முடியாது. நான் தயாரித்துள்ள இந்த படத்தில் அவர் நடித்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. தம்பி கார்த்தியை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்ற ஆசையும் இதில் நிறைவேறி இருக்கிறது. வருகிற கதைகளை எல்லாம் படமாக தயாரிக்க வேண்டும் என்று நினைப்பது இல்லை. ஏதாவது ஒரு வகையில் மனதை கவரும் கதைகளை மட்டுமே தயாரிக்கிறேன். இந்த படமும் அப்படிப்பட்ட ஒரு நல்ல கதைதான்”. இவ்வாறு சூர்யா பேசினார்.

நடிகர் கார்த்தி பேசியதாவது:-

“என்னை வைத்து எனது அண்ணன் தயாரித்துள்ள இந்த படம் லாபம் ஈட்டி கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை உள்ளது. அந்த வாய்ப்பு விரைவில் அமையும் என்று நம்புகிறேன். அதற்காக காத்து இருக்கிறேன். நான் நடித்த முதல் படமே கிராமத்து கதை. கிராமிய கதை அம்சம் கொண்ட எனது படங்கள் அனைத்தும் நன்றாக ஓடி உள்ளன. அதுபோல் இந்த படத்துக்கும் வரவேற்பு கிடைக்கும்”. இவ்வாறு அவர் பேசினார்.

நடிகர் சத்யராஜ் பேசும்போது, “சிவகுமாரால் வளர்க்கப்பட்ட பல மரங்களில் நானும் ஒருவன். சிறுவயதில் நான் தூக்கி வளர்த்த கார்த்தியுடன் இணைந்து நடித்து இருப்பது மகிழ்ச்சி. இது எங்கள் குடும்ப படம்” என்றார்.