உடல் உறுப்புகள் தானம் செய்த இந்தி நடிகர்- நடிகைகள்

இந்தி நடிகர்- நடிகைகளான சல்மான்கான், அமீர்கான், ஐஸ்வர்யாராய், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பலர் உடல் உறுப்புகள் தானம் செய்துள்ளனர்.

Update: 2018-06-11 23:15 GMT

இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு உடல் உறுப்புகளை தானமாக பெற முடியாமல் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்து போவதாக கணக்கு சொல்கிறார்கள். தற்போது விழிப்புணர்வுகள் ஏற்பட்டு அதிகம்பேர் தானம் செய்ய முன்வருகிறார்கள் நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்களும் உறுப்பு தானம் செய்துள்ளனர். இந்தி நடிகர், நடிகைகள் பலர் இந்த பட்டியலில் உள்ளனர்.

உலக அழகி பட்டம் வென்று இந்தி படங்களில் நடித்து சர்வதேச அளவில் ரசிகர்களை கவர்ந்த ஐஸ்வர்யாராய் வசீகரிக்கும் கண்களை உடையவர். அந்த கண்களை மரணத்துக்கு பிறகு எடுத்துக்கொள்ளலாம் என்று தானம் செய்து இருக்கிறார். அவரது மாமனார் அமிதாப்பச்சனும் கண்தானம் செய்துள்ளார். மாமியார் ஜெயாபச்சன் உடல் உறுப்புகள் அனைத்தையும் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு தானமாக எழுதி கொடுத்துள்ளார். ஹாலிவுட்டிலும் கொடி கட்டி பறக்கும் பிரியங்கா சோப்ரா தனது உடல் உறுப்புகளை தானம் செய்து இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, “எனது தாத்தா அசோக் சோப்ரா உறுப்புதானம் பெற முடியாமல் இறந்தது எனக்கு பெரிய வேதனையை ஏற்படுத்தியது. அந்த கஷ்டம் மற்றவர்களுக்கு வரக்கூடாது என்பதற்காக மரணத்துக்கு பிறகு எனது அனைத்து உறுப்புகளையும் எடுத்துக்கொள்ளலாம் என்று தானம் எழுதி வைத்துள்ளேன்” என்றார்.

சத்ருகன் சின்ஹாவின் மகளும், நடிகையுமான சோனாக்சி சின்ஹா கண்தானம் செய்துள்ளார். நடிகர் அமீர்கான் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் தானம் செய்துள்ளதாக அறிவித்து உள்ளார். சிப் ஆப் தீசிஸ் என்ற படத்தை பார்த்த பிறகே உறுப்பு தானம் செய்யும் எண்ணம் வந்தது என்று அவர் கூறினார்.

சல்மான்கான் எலும்புக்குள் இருக்கும் மஜ்ஜையை தானம் செய்துள்ளார். நோயாளிகளுக்கும் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கும் எலும்பு மஜ்ஜை மிகவும் பயன் அளிக்க கூடியது என்றும் மஜ்ஜை தானம் செய்த முதல் இந்தியர் நான்தான் என்றும் சல்மான்கான் கூறினார்.

ராணிமுகர்ஜி கண்தானம் செய்துள்ளார். “நாம் இறந்த பிறகு மண்ணுக்குள் அழியப்போகும் கண்களை இன்னொருவருக்கு தானமாக கொடுத்து அந்த கண் மூலம் அவர் உலகத்தை பார்க்கிறார் என்று உணரும்போதே மகிழ்ச்சியாக இருக்கிறது. அதனால் எனது கண்களை தானம் செய்துள்ளேன்” என்று ராணிமுகர்ஜி கூறினார்.

மேலும் செய்திகள்