போராட வயது ஒரு தடையில்லை - பட விழாவில், கவிஞர் வைரமுத்து பேச்சு

போராட வயது ஒரு தடையில்லை என பட விழாவில், கவிஞர் வைரமுத்து பேசினார்.

Update: 2018-06-12 22:45 GMT
டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கதைநாயகனாக நடித்திருக்கும் ‘டிராபிக் ராமசாமி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. பாடல்களை கவிஞர் வைரமுத்து வெளியிட, டைரக்டர் ஷங்கர் பெற்றுக் கொண்டார். விழாவில், கவிஞர் வைரமுத்து பேசியதாவது:-

“இந்த ‘டிராபிக் ராமசாமி’ மாதிரி ஒரு கதையை படமாக்க சமூக அக்கறை வேண்டும். அது, எஸ்.ஏ.சி.க்கு இருக்கிறது. அவர் வேறு ஒரு கதையை படமாக எடுத்திருக்கலாம். வியாபாரம் என்பது இரண்டாம் பட்சம். டிராபிக் ராமசாமி என்கிற நிகழ்கால தத்துவம் அவரை ஈர்த்திருக்கிறது.

அதில் ஒரு படத்தை எடுக்கிற அளவுக்கு கச்சாப்பொருள் இருக்கிறது என்று நம்பி ஈர்க்கப்பட்டு இருக்கிறார். இறந்த காலத்தையும், எதிர்காலத்தையும் படமாக்குவது எளிது. ஆனால், நிகழ்காலத்துக்கு கதை செய்வது கடினம். நிகழ்காலத்தில் எரியும் நிமிடங்களை படமாக்குவது ஒரு சவால். அதை இந்த படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் செய்து இருக்கிறார்.

இவரை பார்த்தாலும், டிராபிக் ராமசாமியை பார்த்தாலும், போராட வயது ஒரு தடையில்லை என்று கூற முடியும். தேவையானது மனசுதானே தவிர வயது அல்ல. போராளிகள் நெஞ்சை காட்டுவார்கள். தழும்புகளை வெளியே காட்ட மாட்டார்கள்.” இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.

விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஷோபா சந்திரசேகரன், டிராபிக் ராமசாமி, டைரக்டர்கள் ஷங்கர், ராஜேஷ் எம், பொன்ராம், சாமி, நடிகர் ஆர்.கே.சுரேஷ், நடிகைகள் அம்பிகா, ரோகிணி, தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் கதிரேசன், தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார், இசையமைப்பாளர் பாலமுரளி பாலு, படத்தின் டைரக்டர் விக்கி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

மேலும் செய்திகள்