சினிமா செய்திகள்
காதலியை தாக்கிய நடிகர் கைது

காதலியை தாக்கிய நடிகர் கைது செய்யப்பட்டார்.
இந்தி பட உலகில் பிரபல நடிகராக இருப்பவர் அர்மான் கோலி. இவர் ஜானி துஷ்மன், ஏக் அனோகி கஹானி, கார்கில் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். 45 வயதாகும் அர்மான் கோலியும், 35 வயது மாடல் அழகி நீரு ராந்தவாவும் காதலித்தனர். பின்னர் இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலே சேர்ந்து வாழ்ந்தனர்.

ஆனால் சில மாதங்களிலேயே அவர்களுக்குள் பண விவகாரத்தில் தகராறு மூண்டது. கடந்த ஜூன் மாதம் நீருவுக்கும், அர்மான் கோலிக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டது. அப்போது நீருவை கீழே பிடித்து தள்ளியுள்ளார் அர்மான் கோலி. பின்னர் தலைமுடியை கொத்தாக பிடித்து இழுத்து தரையில் அடித்துள்ளார்.

இதில் நீருவுக்கு தலையிலும் முகத்திலும் ரத்த காயங்கள் ஏற்பட்டன. அவரை டிரைவர் மீட்டு மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். இந்த சம்பவம் குறித்து நீரு போலீசில் புகார் அளித்தார். அவர் கூறும்போது, “அர்மான் கோலி அடித்ததில் காயம் ஏற்பட்டு எனது தலையில் 15 தையல்கள் போடப்பட்டன” என்றார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அர்மான் கோலியை தேடி வந்தனர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார்.

தற்போது புதிய சிம்கார்டு வாங்குவதற்காக வெளியே வந்தபோது அர்மான் கோலியை போலீசார் கைது செய்தனர். இதுவரை அவர் தனது நண்பரின் பண்ணை வீட்டில் மறைந்து இருந்தது தெரியவந்துள்ளது.