சினிமா செய்திகள்
திருட்டுத்தனமாக ‘ஒரு குப்பை கதை’யை படம்பிடித்த தியேட்டருக்கு ‘சீல்’

ஒரு குப்பை கதை படத்தினை திருட்டுத்தனமாக படம்பிடித்த தியேட்டருக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ள புதிய படங்களை திருட்டுத்தனமாக வீடியோவில் பதிவு செய்து வெளியிடுவதை தடுக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழகம் முழுவதும் ஆட்களை நியமித்து கண்காணித்து வருகிறது. இந்த நிலையில் ஒரு தியேட்டரில் சமீபத்தில் திரைக்கு வந்த ‘ஒரு குப்பை கதை’ படத்தை படம்பிடித்ததை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“மயிலாடுதுறை கோமதி திரையரங்கத்தில் ஒரு குப்பை கதை திரைப்படம் திருட்டுத்தனமாக படம் பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டு அதனை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் தலைமையில் செயல்படும் நிர்வாகம் சார்பில் மேற்கண்ட திரைப்படத்தின் தயாரிப்பாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில், தற்போது காவல்துறை அதிரடியாக அந்த திரையரங்கிற்கு சீல் வைத்தும், அந்த திரையரங்க ஊழியர் ஒருவரை கைது செய்தும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.” இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.