சினிமா செய்திகள்
13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா

தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் கொடி கட்டி பறக்கிறார் நயன்தாரா. சினிமாவுக்கு வந்ததில் இருந்து அவருக்கு ஏறுமுகம்தான்.
எத்தனையோ கதாநாயகிகள் வந்தும் நயன்தாராவை எட்டிப்பிடிக்க முடியவில்லை. சிம்பு, பிரபுதேவா காதல் சர்ச்சைகளில் சிக்கியபோது இனி தேறமாட்டார் என்று பலரும் ஆருடம் கணித்தனர். ஆனால் அந்த சரிவுகளில் இருந்து மீண்டு இன்றைக்கும் நம்பர்-1 ஆகவே தொடர்கிறார்.

நயன்தாரா அறிமுகமான ஐயா படம் 2005-ல் வெளியானது. அதன்பிறகு சந்திரமுகி, கஜினி, சிவகாசி, வல்லவன், பில்லா, ஆதவன், பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி, தனி ஒருவன் என்று அவர் நடித்த பல படங்கள் நல்ல வசூல் பார்த்து லாபம் ஈட்டின. இப்போதெல்லாம் பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்வதை நயன்தாரா தவிர்த்து கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்.

கதாநாயகன் இல்லாமல் கலெக்டராக நடித்த அறம் படம் வசூலில் சக்கை போடு போட்டது. மாயா படத்தில் பேயாக நடித்தார். இப்போது இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா ஆகிய கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் நடித்து வருகிறார். கோலமாவு கோகிலா படத்தில் சிரிப்பு நடிகர் யோகிபாபு தன்னை காதலித்து பாட்டு பாடும் காட்சியில் இமேஜ் பார்க்காமல் நடித்து படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தினார். அஜித் ஜோடியாக நடிக்கும் விசுவாசம் படமும் நயன்தாரா கைவசம் உள்ளது. அடுத்து குறும் படம் இயக்கிய பிரபலமில்லாத சர்ஜுன் டைரக்டு செய்யும் திகில் படமொன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். பெரிய இயக்குனர்கள் அவரது கால்ஷீட்டுக்கு காத்து இருக்கும்போது கதையில் நம்பிக்கை வைத்து புதிய இயக்குனர் படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.

இது, நயன்தாராவுக்கு 63-வது படமாகும். முன்னணி கதாநாயகர்களான விஜய் 62-வது படத்திலும் அஜித்குமார் 59-வது படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.