சினிமா செய்திகள்
அழகு உடலில் அல்ல அறிவில் இருக்கிறது - ஊர்வசி ரத்துலா

அழகுப் போட்டியில் வெற்றிபெறும் கவர்ச்சிப் பெண்கள் அனைவரும் அடுத்து சினிமாவைத்தான் குறிவைக்கிறார்கள்.
அழகுப் போட்டியில் வெற்றிபெறும் கவர்ச்சிப் பெண்கள் அனைவரும் அடுத்து சினிமாவைத்தான் குறிவைக்கிறார்கள். அதனால்தான் அழகுப் போட்டியை சினிமாவின் நுழைவாயில் என்றும் சொல்கிறார்கள். ஊர்வசி ரத்துலாவும் அந்த நுழைவாயில் வழியாகத்தான் சினிமாவுக்குள் நுழைந்தார். 2015-ல் அழகுப் போட்டிக்குள் அடியெடுத்துவைத்த இவர், மிஸ் இந்தியா போட்டியிலும் கலந்து கொண்டு வெற்றிபெற்றார். அடுத்து சினிமாவுக்குள் நுழைந்தார். ‘சிங் சாப் த கிரேட்’ படத்தில் அறிமுகமானார். ஹரித்துவாரைச் சேர்ந்்த ஊர்வசி ரத்துலா இந்தி தவிர கன்னடம், வங்காள மொழிகளிலும் நடித்துள்ளார். ‘ஹேட் ஸ்டோரி- 4’ இவரது சமீபத்திய படமாகும்.

“ஹேட் ஸ்டோரி- 4 எனக்கு அதிக புகழை பெற்றுத்தந்திருக்கிறது. அது சிறந்த காதல் கதை என்பதால் நான் விரும்பி நடித்தேன். அதிக அளவு ரசிகர்களிடம் என்னை அந்த படம் கொண்டுபோய் சேர்த்திருக்கிறது” என்றவரிடம் தொடர்ந்து சில கேள்விகள்!

அழகுப் போட்டியில் கிடைத்த வெற்றி, எந்த அளவுக்கு சினிமாவிற்கு கை கொடுத்தது?

“அழகுப் போட்டி என்பது வெறும் நுழைவுத் தேர்வு போன்றதுதான். அது சினிமாவில் நுழைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. நம்மிடம் எந்த அளவுக்கு திறமை இருக்கிறதோ அந்த அடிப்படையில்தான் சினிமாவில் நம்மை நிலைநிறுத்திக்கொள்ள முடியும்”

அதில் ‘ஹைஹீல்ஸ்’ செருப்பணிந்து அபாரமாக நடனம் ஆடியிருக்கிறீர்களே?

“நான் முறைப்படி நாட்டியம் கற்றுள்ளேன். பரதநாட்டியம், பாலே, சினிமா நடனம், மேற்கத்திய நடனம் போன்றவைகளை எல்லாம் கற்றுள்ளேன். அதனால் எனக்கு ஹைஹீல்ஸ் நடனம் சிரமத்தை தரவில்லை. அந்த காலணியில் நன்றாக பேலன்ஸ் செய்து ஆட வேண்டும். கொஞ்சம் புதுமையான நடனம். எனக்கும் திரில்லிங்காக இருந்தது”

சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருந்ததா?

“அப்படி எந்த ஆசையும் எனக்கு இருந்ததில்லை. அதற்கான முயற்சிகளிலும் நான் ஈடுபடவில்லை. ஆனால் அதிர்ஷ்டவசமாக நான் சினிமாவிற்கு வந்துவிட்டேன். மிஸ் இந்தியா பட்டம் பெற்றதும், மாடலிங் செய்ய அழைத்தார்கள். அடுத்து சினிமா வாய்ப்பு வந்தது. மறுக்க முடியவில்லை”

உங்களை மிகவும் கவர்ந்த நடிகர் யார்?

“ரித்திக் ரோஷன்! அவருடைய நடிப்பை விட நடனம் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒவ்வொரு படத்திலும் அவரது நடிப்பையும், நடனத்தையும் நான் ரசிக்கிறேன். ‘காபில்’ படத்திற்காக ரித்திக் ரோஷன் அவருடன் நடனமாட என்னை அழைத்தபோது மிகவும் பெருமைப்பட்டேன். அந்த நினைவு பசுமையாய் என் மனதில் நிறைந்திருக்கிறது”

உங்கள் திரை உலக பயணத்திற்கு குடும்பத்தினரின் ஆதரவு முழுமையாக கிடைக்கிறதா?

“குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் எந்த பெண்ணாலும் திரை உலகில் ஜொலிக்க முடியாது. என் அம்மா தொழில் அதிபர். அப்பா விவசாயி. என்னை விட அம்மா மிகவும் அழகாக இருப்பார். என் அம்மாவிடம் பலரும், ‘நீங்களும் அழகுப் போட்டியில் கலந்துகொண்டால் ஜெயித்துவிடுவீர்கள்’ என்று சொல்வார்கள். நான் பெற்றோருக்கு ஒரே பெண் என்பதால் சுதந்திரமாக வளர்க்கப்பட்டேன்”

அழகுப் போட்டியில் கிடைத்த வெற்றிகள் எந்த அளவுக்கு உங்களுக்கு புகழைத் தந்தது?

“நான் பல்வேறு அழகுப் போட்டிகளில் பங்கேற்றிருக்கிறேன். வெற்றியும் பெற்றிருக்கிறேன். மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் பங்கு பெற விண்ணப்பித்தபோது, 20 நாள் சிறியவள் என்று நிராகரிக்கப்பட்டேன். அது மிகுந்த வருத்தத்தை தந்தது. காத்திருந்து, மீண்டும் கலந்துகொண்டேன். அழகுப் போட்டியில் பெற்ற வெற்றிகள்தான் என் வளர்ச்சிக்கு காரணம். அதுவே என் புகழுக்கும் அடிப்படையாக இருந்தது”

பெண்கள் அதிக அளவில் அழகுப்போட்டி களில் பங்குபெறவேண்டும் என்று விரும்புகிறீர்களா?

“ஆமாம். அழகு பற்றிய விழிப்புணர்வு பெண்களிடம் அதிகரித்திருக்கிறது. பெண்கள் ஆரோக்கியத்திற்கும், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும் அதிக முயற்சிகள் எடுக்கிறார்கள். பொது அறிவை வளர்த்துக் கொள்ளவும், உலக நடப்புகளை தெரிந்து கொள்ளவும் ஆர்வம் காட்டுகிறார்கள். அழகு என்பது உடலில் மட்டுமல்ல, அறிவிலும் இருக்கிறது. அறிவும் ஒரு அழகு தான். பெண்கள் தற்போது பன்முகத் திறமை கொண்டவர்களாக இருப்பதால், அவர்களால் அழகுப் போட்டிகளிலும் ஜொலிக்க முடியும். அழகுப் போட்டியில் வெற்றி பெற நிறைய உழைக்கவேண்டும். நல்ல வாழ்வியல் பழக்கங்களையும் உருவாக்கிக்கொள்ளவேண்டும்”

ஊர்வசி ரத்துலாவிடம் அழகைப் போல் அறிவும் கொட்டிக்கிடக்கிறது!