சினிமா செய்திகள்
படுக்கைக்கு அழைப்பு : பட அதிபர் மீது பாடலாசிரியை புகார்

சினிமா துறையில் வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளன.
இந்தி, தெலுங்கு, கன்னட நடிகைகள் பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார்கள். தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் சிலர் இந்த செக்ஸ் குற்றச்சாட்டுகளில் சிக்கி உள்ளனர்.

பாலியல் தொல்லைகளை எதிர்த்து மகளிர் அமைப்புகள் போராட்டங்களில் இறங்கி உள்ளன. நடிகைகள் பாதுகாப்புக்கு புதிய அமைப்புகளையும் தொடங்கி இருக்கிறார்கள். இந்த நிலையில் தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய அர்ஜுன் ரெட்டி, பெல்லு சூப்புலு உள்பட பல படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ள பிரபல பாடலாசிரியை சிரேஷ்டா, தயாரிப்பாளர் ஒருவர் மீது செக்ஸ் புகார் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:–

‘‘திரையுலகில் நடிகைகளை மட்டுமன்றி பிற பணிகளில் ஈடுபடும் பெண்களை கூட படுக்கைக்கு அழைத்து தொந்தரவு செய்யும் வழக்கம் இருக்கிறது. ஒரு பிரபல தயாரிப்பாளரின் மனைவி என்னிடம் வந்து அவரது கணவரின் ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தினார். அது எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. சினிமா துறையில் இருக்கும் சிலர் என்னிடம் வெறும் எழுத்தை மட்டும் வைத்துக்கொண்டு தெலுங்கு பட உலகில் உனக்கென்று ஒரு இடத்தை பிடிக்க முடியாது என்று அறிவுரை கூறினார்கள்.’’ என்றார்.

இவரது புகார் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.