சினிமா செய்திகள்
விஜய்- 62: படத்தலைப்பு வெளியீட்டு தேதி அறிவிப்பு

விஜய்- 62 படத்தின் தலைப்பு வெளியிடும் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. #ThalapathyVijay
சென்னை,

நடிகர் விஜய் நடித்து கடந்த ஆண்டு (2017) தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸான படம் ‘மெர்சல்’. அட்லி இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இவர்கள் காம்போவில் வெளியான ‘துப்பாக்கி, கத்தி’ ஆகிய 2 படங்களுமே மெகா ஹிட்டானது.

ஆகையால், இந்த படம் குறித்த செய்தி வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. விஜய்யின் 62-வது படமான இதனை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்-க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ராதாரவி, பழ.கருப்பையா, வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் நெகட்டிவ் ஷேடில் நடிக்கின்றனராம். ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார், ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார்.

படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்திற்கான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகியவை ஜூன் 21-ந் தேதி மாலை 6 மணி அளவில் வெளியிட உள்ளதாக, விஜய்-62 படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. வரும் ஜூன் 22-ந் தேதி விஜய் பிறந்த நாள் வர உள்ள நிலையில் இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.