சினிமா செய்திகள்
“என் உடல் எடையை விமர்சிப்பதால் வருத்தம்” -நடிகை நஸ்ரியா

எனது உடல் எடையை பற்றி விமர்சனங்கள் வந்ததது வருத்தமாக இருந்தது என்று நடிகை நஸ்ரியா கூறினார்.
ராஜா ராணி, நய்யாண்டி, நேரம், திருமணம் எனும் நிக்கா என்று தமிழ் படங்களில் வலம் வந்த கேரள நடிகை நஸ்ரியா திடீரென்று மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து சினிமாவை விட்டு ஒதுங்கினார். சில மாதங்கள் கழித்து உடல் எடை கூடி பருமனாக இருக்கும் அவரது படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவரது தோற்றத்தை விமர்சித்து டுவிட்டரில் பேசி வந்தனர். அதற்கு பஹத் பாசில் பதிலடி கொடுத்து கண்டித்தார். அதன்பிறகு சில வருடங்கள் கணவருடன் குடும்பம் நடத்திய அவர் 4 வருடத்துக்கு பிறகு இப்போது மீண்டும் ‘கூடே’ என்ற மலையாள படம் மூலம் நடிக்க வந்து இருக்கிறார். பிருதிவிராஜ், பார்வதி மேனன் ஆகியோரும் இதில் உள்ளனர்.

மீண்டும் நடிப்பது குறித்து நஸ்ரியா கூறியதாவது:-

“திருமணத்துக்கு பிறகு என்னை சந்திக்கிறவர்கள் ஏன் சும்மா இருக்கிறாய், போரடிக்கவில்லையா என்று கேட்டு விட்டு சென்றனர். நான் சும்மா இருக்கவில்லை. எனது கணவருடன் அமெரிக்கா, லண்டன் என்று வெளிநாடுகளில் சுற்றிக்கொண்டு இருந்தேன். பஹத்தும் திருமணத்துக்கு பிறகு ஒருவருடம் ஓய்வு எடுத்து என்னுடன் இருந்தார்.

திடீரென்று ஒரு நாள் சினிமாவில் தொடர்ந்து நடிக்கலாமே என்று பஹத் கேட்டார். அப்போது அஞ்சலி மேனன் என்னை அணுகி கதை சொன்னார். அந்த கதை எனக்கு பிடித்து இருந்ததால் மீண்டும் நடிக்க வந்து விட்டேன். படத்தில் பிருத்விராஜ் தங்கையாக வருகிறேன். சமூக வலைத்தளங்களில் எனது உடல் எடையை பற்றி விமர்சனங்கள் வந்ததை பார்த்து வருத்தமாக இருந்தது. இப்போது எடை குறைத்து இருக்கிறேன். அதையும் கேலி செய்கிறார்கள்.”

இவ்வாறு அவர் கூறினார்.