சினிமா செய்திகள்
அஜித்குமாரின் எளிமையை பார்த்து வியந்து போன படக்குழுவினர்

அஜித்குமார் இப்போது, ‘விசுவாசம்’ படத்தில் நடித்து வருகிறார். அதில், அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
அஜித்குமார் இப்போது, ‘விசுவாசம்’ படத்தில் நடித்து வருகிறார். அதில், அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். சிவா டைரக்டு செய்கிறார். முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடைபெற்றது. அஜித்குமார்-நயன்தாரா சம்பந்தப்பட்ட முக்கிய காட்சிகளும், படுபயங்கரமான ஒரு சண்டை காட்சியும் அங்கு படமாக்கப்பட்டன. அத்துடன் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது.

அடுத்த கட்ட படப்பிடிப்பு, வருகிற 27-ந் தேதி முதல் சென்னையில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், ஐதராபாத்தில் அஜித்குமார் தங்கியிருந்தபோது, அவருடைய எளிமைக்கு உதாரணமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. அந்த சம்பவம் வருமாறு:-

‘விசுவாசம்’ படப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்ற அஜித்குமாருக்கு அங்குள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. ‘விசுவாசம்’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த 10-ந் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது. சில காட்சிகளை படமாக்குவதற்கு மேலும் 2 நாட்கள் தேவைப்பட்டது. அதனால் அஜித்குமார் தங்கியிருந்த ஓட்டல் அறையில், மேலும் 2 நாட்கள் தங்குவதற்கு அனுமதிக்கும்படி, ஓட்டல் நிர்வாகியிடம் படத்தின் தயாரிப்பு நிர்வாகி கேட்டார்.

ஏற்கனவே செய்திருந்த ஒப்பந்தப்படி, அந்த அறை 11-ந் தேதி முதல் இந்தி நடிகர் ரன்வீர் கபூருக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதாக ஓட்டல் நிர்வாகி தெரிவித்தார். “நம்மால் இன்னொரு நடிகருக்கோ அல்லது படக்குழுவினருக்கோ இடையூறு ஏற்படக் கூடாது” என்று கூறிய அஜித்குமார் தனது அறையை உடனே காலி செய்து விட்டார்.

“எனக்கு ஒரு சின்ன கட்டிலும், மின்விசிறியும் இருந்தால் போதும்” என்று கூறிய அவர், அந்த ஓட்டலிலேயே ஒரு சிறிய அறையில் தங்குவதற்கு சம்மதித்தார். அவரின் எளிமையை பார்த்து படக்குழுவினரும், ஓட்டல் நிர்வாகியும் வியந்து போனார்கள்.