சினிமா செய்திகள்
தயாரிப்பாளரான சுருதிஹாசன்

சுருதிஹாசன் தற்போது தயாரிப்பாளராக மாறி இருக்கிறார்.
சுருதிஹாசன் 2009-ல் லக் என்ற இந்தி படத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். விஜய், அஜித், விஷால், தனுஷ் என்று பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்தார். இப்போது சபாஷ் நாயுடு என்ற ஒரு படம் மட்டும் கைவசம் உள்ளது. அதன் படப்பிடிப்பும் பாதியில் நிற்கிறது. புதிய படங்களில் நடிக்க அவர் மறுத்து வருகிறார்.

இந்த நிலையில் சுருதிஹாசன் தற்போது தயாரிப்பாளராக மாறி இருக்கிறார். தனது சொந்த நிறுவனமான இஸிட்ரோ மீடியா சார்பில் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி’ என்ற படத்தை தயாரிக்கப் போவதாக சுருதிஹாசன் அறிவித்து இருக்கிறார். இந்த படத்தை லென்ஸ் படத்தை இயக்கி பிரபலமான ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் டைரக்டு செய்கிறார்.

4 நண்பர்களின் மூலம் இந்த சமூகம் எப்படி பழங்கால மரபுகளின் வீழ்ச்சியையும், நவீனத்தின் எழுச்சியையும் எதிர்கொள்கிறது என்பதே படத்தின் கதையாக இருக்கும் என்றார் இயக்குனர். தயாரிப்பாளரானது குறித்து சுருதிஹாசன் கூறும்போது, ‘த மஸ்கிட்டோ பிலாஸபி கதையை கேட்டதும் இயக்குனரை பாராட்டினேன். இந்த படத்தை தயாரிப்பதில் பெருமைப்படுகிறேன்’ என்றார்.