படப்பிடிப்பில் ருசிகர சம்பவம் டார்ஜிலிங்கில் தங்கும் விடுதிக்கு ரஜினிகாந்த் பெயர்

மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங்கில் ரஜினிகாந்த் தங்கி இருந்த ஒரு விடுதிக்கு அவரது பெயரையே சூட்டி உள்ளனர்.

Update: 2018-06-21 23:45 GMT
ரஜினிகாந்துக்கு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தீவிர ரசிகர்கள் இருக்கிறார்கள். வெளிநாடுகளிலும் ரசிகர்கள் உள்ளனர். சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் எல்லாம் அவருடைய ரசிகர்களாக தங்களை அடையாளம் காட்டி உள்ளனர்.

ஜப்பானியர்கள் ரஜினிக்கு ரசிகர் மன்றமே வைத்துள்ளனர். சமீபத்தில் காலா படம் வெளியானபோது ஜப்பான் ரசிகர்கள் குடும்பத்தோடு சென்னை வந்து படம் பார்த்து ஆச்சரியப்படுத்தினார்கள்.

இப்போது ரஜினிகாந்த் தங்கி இருந்த ஒரு விடுதிக்கு அவரது பெயரையே சூட்டி உள்ளனர். மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங்கில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

காலா படத்துக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடந்து வருகிறது. படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக டார்ஜிலிங் சென்ற ரஜினிகாந்தை கர்சியாங் பகுதியில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் (ரிசார்ட்) தங்க வைத்தனர். அந்த ரிசார்ட் இயக்குனர் தங்கும் ‘வில்லா’வையே ரஜினிகாந்துக்கு ஒதுக்கி இருந்தார்.

அவர் 10 நாட்கள் அந்த விடுதியில் தங்கி இருந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டார். ரஜினிகாந்த் தங்கி இருந்த வில்லா பகுதிக்கு அவரது பெயரை சூட்ட ஓட்டல் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து ‘ரஜினிகாந்த் வில்லா-3’ என்று அதற்கு பெயர் சூட்டி அந்த பெயர் பலகையை ரஜினிகாந்தை வைத்தே திறந்து வைத்தனர்.

அங்குள்ள ‘சாய் டீ பார் லவுஞ்’சில் ரஜினி டீயை விரும்பி சாப்பிடுவாராம். அதற்கு ‘தலைவா ஸ்பெஷல்’ என்றும் பெயர் சூட்டி பலகை வைத்தனர். பெயர் சூட்டிய படங்கள் டுவிட்டரில் வெளியாகி உள்ளன.

“எங்களுடையை அன்பையும், மரியாதையையும் காட்டும் சிறிய பங்களிப்பாக ரஜினிகாந்த் பெயரை சூட்டி இருக்கிறோம்” என்று ஓட்டல் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். இது ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து இருக்கிறது. பெயர் சூட்டல் தொடர்பான படங்களை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்