சினிமா செய்திகள்
மிஷன் இம்பாசிபிளும், ஆக்‌ஷன் நாயகன் டாம் குரூஸும்..!

டாம் குரூஸ், ஐம்பது வயதைக் கடந்த அதிரடி நாயகன். ‘மிஷன் இம்பாசிபிள்’ வரிசை படங்களின் மூலம் உலகறிந்த பிரபலம்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக ஹாலிவுட்டில் கோலோச்சிக் கொண்டிருப்பது மிஷன் இம்பாசிபிள் திரைப்படங்களும், அதன் கதாநாயகன் டாம் குரூஸும்தான். அந்தளவிற்கு மிஷன் இம்பாசிபிள் திரைப்படத்திற்கும், டாம் குரூஸுக்கு நல்ல கெமிஸ்டரி அமைந்திருக்கிறது. மிஷன் இம்பாசிபிள் படமானது ஹாலிவுட்டின் மற்ற படங்களின் வரிசைகள் போல் கதை தொடர்ச்சி இல்லாத படம். மிஷன் இம்பாசிபிள் படத்தை பொறுத்தவரை ஒவ்வொறு பாகமும் ஒவ்வொறு கதையைக் கொண்டிருக்கும். ஆனால் கதை கரு என்பது எல்லா கதைக்கும் ஒன்று தான். படத்தின் நாயகன் ஏதாவது ஒன்றை தேடி தனது அணியுடன் பயணப்பட்டு சாகசம் புரிந்து அதை மீட்டு வருவதாக இருக்கும்.

டாம் குரூஸுற்கு எந்த படம் ஓடினாலும், ஓடவிட்டாலும் கவலையே இல்லை. ஏனெனில் மிஷன் இம்பாசிபிள் திரைப்படங்கள் அவரது மார்க்கெட்டை சரியவிடாமல் பார்த்துக் கொள்கின்றன. இதுவரை வெளியான 5 பாகங்களும் லாபகரமான வசூலை அள்ளின. அதனால் அதன் அடுத்தடுத்த பாகங்கள் தயாராகிக் கொண்டே இருக்கிறது. அந்தவரிசையில் ‘மிஷன் இம்பாசிபிள் பால் அவுட்’ என்ற திரைப்படமும் தயாராகி வருகிறது.

பொதுவாக ரிஸ்க் எடுப்பதில் வல்லவரான டாம் குரூஸ், இந்த படத்திற்காக மிகப்பெரிய ரிஸ்க்கை எடுத்திருக்கிறார். ஆம்..! துபாயில் சமீபத்தில் படமாக்கப்பட்ட சாகச காட்சியில், டூப் இல்லாமல் 25 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்திருக்கிறார். அதுவும் ஹாலோ ஜம்ப் முறையில் குதித்தாராம். ‘ஹாலோ ஜம்ப்’ என்பது பாராசூட் டைவிங் வீரர்களே செய்ய தயங்கும் ஒரு சாகசம். ஏனெனில் தரை மட்டத்திற்கு மிக அருகில் வந்த பிறகே பாராசூட்டை விரிக்கவேண்டும். கிட்டத்தட்ட கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் கதைதான். அதையே நம்ம ஹீரோ டாம் குரூஸ் செய்து அசத்தியிருக்கிறார். இந்த படத் தில் சர்வதேச உளவாளியாக நடிப்பதால், இவருக்கு சவூதி அரேபிய ராணுவத்தின் உதவியும் கிடைத்திருக்கிறது. ராணுவ விமானத்திலேயே 25 ஆயிரம் அடி உயரம் வரை பறந்து சென்று, இந்த சாகசத்தை நிகழ்த்தியிருக்கிறார்.

சாகசமும், ஆக்‌ஷன் காட்சிகளும் நிறைந்திருக்கும் மிஷன் இம்பாசிபிள் திரைப்படங்கள், டி.வி. நிகழ்ச்சியை அடிப்படையாக கொண்டவை. ஆம்...! இன்று உலகமே கண்டு வியக்கும் மிஷன் இம்பாசிபிள் திரைப்படங்கள் ஒரு காலத்தில் டி.வி.தொடர்களாகவும், நிகழ்ச்சிகளாகவும் ஓடியவை. ஆனால் அந்தசமயம் மிஷன் இம்பாசிபிள் கதைகளுக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லையாம். இருப்பினும் டி.வி.தொடர்களை இயக்கிய புரூஸ் கெல்லர், விடாமுயற்சியுடன் அந்த கதைகளை திரைப்படமாக்கினார். அதிலும் நம்ம கதாநாயகன் டாம் குரூஸ் உயிரைக் கொடுத்து நடித்ததால், முதல் படமே மெகா ஹிட் அடித்தது. அதனால் இவர்களது கூட்டணி நீடித்து வருகிறது.

மிஷன் இம்பாசிபிளின் கதை டாமிற்கு பிடித்துப்போக, தன்னுடைய நடிப்புடன், பணத்தையும் செலவழித்து வருகிறார். ஆம்..! முதல் பாகம் தொடங்கி, தற்போது தயாராகும் 6-ம் பாகம் வரை, டாம் குரூஸ் மிஷன் இம்பாசிபிளின் மறைமுக தயாரிப்பாளர். அதனால்தாேனா என்னவோ, உயிரைக் கொடுத்து நடித்து வருகிறார். மிஷன் இம்பாசிபிள் டி.வி தொடர் மொத்தம் 171 எபிசோடுகளையும் 7 பாகங்களையும் கொண்டது. அதன்படி பார்த்தால் மிஷன் இம்பாசிபிள் படம் இப்பொழுது வரும் பாகத்திற்கு பின் இன்னும் ஒரு பாகம் கடைசி பாகமாக தயாராகலாம். ஏற்கனவே நம்ம கதாநாயகனுக்கு வயதாகிவிட்டதால், 7-வது பாகத்தில் புதிய நடிகர்களை ‘ஈதன்’ கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது. இவை அனைத்திற்கும் காலம்தான் பதில் சொல்லவேண்டும். என்ன இருந்தாலும் மிஷன் இம்பாசிபிள் போல் இனி ஒரு படமும், டாம் போல் இனி ஒரு நாயகனும் சாத்தியமற்றவைகளே.