சினிமா செய்திகள்
ஸ்ரீப்ரியாவுடன் காயத்ரி ரகுராம் மோதல்

நடிகை ஸ்ரீப்ரியாவுக்கும் நடிகை காயத்ரி ரகுராமுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நடிகை ஸ்ரீப்ரியா கடந்த வருடம் தனியார் டி.வி. ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின்போது அதுகுறித்து சமூக வலைத்தளத்தில் அடிக்கடி கருத்துக்களை பதிவிட்டு வந்தார். அப்போது நடிகை காயத்ரி ரகுராமுக்கும் ஓவியாவுக்கும் ஏற்பட்ட மோதல் பரபரப்பாக பேசப்பட்டது.

ஓவியாவை பார்த்து காயத்ரி தலைமுடியை காட்டி ‘ஹேர்’ என்று சொன்னது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் கெட்ட வார்த்தையை பயன்படுத்தியதாக விமர்சனங்கள் கிளம்பின.

அப்போது ஸ்ரீப்ரியாவை மேடைக்கு அழைத்து கமல்ஹாசன் உரையாடிய நிகழ்ச்சியும் நடந்தது. இப்போது ஒருவர் டுவிட்டரில் ‘நீங்கள் ஹேர் குறித்து சொன்ன வார்த்தை பற்றி உங்களிடம் கேட்கும்படி கமல்ஹாசனிடம் ஸ்ரீப்ரியாதான் தூண்டி விட்டார்’ என்று பழைய சம்பவத்தை நினைவுபடுத்தி இருந்தார்.

இதை பார்த்ததும் காயத்ரி ரகுராமுக்கு ஸ்ரீப்ரியா மீது கோபம் ஏற்பட்டு டுவிட்டரில் கடுமையாக சாடி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

“ஸ்ரீப்ரியாவை நான் அக்கா என்று அழைக்க அவர் எனது சகோதரி இல்லை. எனது ஆன்ட்டியும் இல்லை. எனது தோழியாகவோ அல்லது நலம் விரும்பியாகவோ அவர் இல்லை. எனது பாஸோ, சக ஊழியரோ அவர் இல்லை. அவர் எனக்கு சோறுபோடவும் இல்லை. எனது அப்பா, அம்மாவுடன் பணியாற்றி இருக்கலாம். எனக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை.

என்னை கேலி செய்பவர்களில் அவரும் ஒருவர். ஹேர் என்பது கெட்ட வார்த்தை என்பதால் அவருக்கு பிடிக்கவில்லை என்றால் அவர் இன்னும் ஏன் அதை வைத்துள்ளார் என்று தெரியவில்லை. துணிச்சல் இருந்தால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஸ்ரீப்ரியா கலந்து கொள்ளட்டும்.”

இவ்வாறு காயத்ரி ரகுராம் கூறியுள்ளார். இது சமூக வலைத் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.