சினிமா செய்திகள்
“பிரபல கதாநாயகர்களுடன் எனக்கு நட்பு இல்லை” -காஜல் அகர்வால்

பிரபல கதாநாயகர்களுடன் எனக்கு நட்பு இல்லை என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.
விஜய், அஜித், சூர்யா, விஷால், கார்த்தி, தனுஷ் என்று பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த காஜல் அகர்வால் தெலுங்கு, கன்னடத்திலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். இப்போது இந்தியில் வெற்றி பெற்ற குயின் படத்தின் தமிழ் ரீமேக்கான பாரீஸ் பாரீஸ் படத்தில் நடித்து வருகிறார். மேலும் 2 தெலுங்கு படங்களும் கைவசம் வைத்துள்ளார்.

முன்பெல்லாம் பெரிய கதாநாயகர்களுடன் நடித்த அவர் இப்போது இளம் நடிகர்களுடனும் ஜோடி சேர சம்மதிக்கிறார். இதுகுறித்து காஜல் அகர்வால் அளித்த பேட்டி வருமாறு:-

“நான் இளம் நடிகர்களுடன் சேர்ந்து நடிப்பதை ஆச்சரியமாக பேசுகின்றனர். நான் எப்போதுமே என்னுடன் ஜோடியாக நடிக்கும் கதாநாயகன் யார் என்று பார்ப்பது இல்லை. எனக்கு ஒதுக்கி இருக்கும் கதாபாத்திரம் எப்படிப்பட்டது என்பதில்தான் கவனம் செலுத்துவேன். கதாநாயகனாக யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். ஆனால் எனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும்.

அந்த வேடத்தை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதில்தான் ஆர்வம் காட்டுவேன். என்னுடன் பெரிய நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். அவர்களுடன் எனக்கு நட்பு கூட இல்லை. இதில் இருந்து எனது கதை ஆர்வத்தை உணரலாம். சினிமாவில் நிறைய மாற்றங்கள் நடக்கிறது. அதற்கேற்ப என்னை மாற்றிக்கொண்டு வருகிறேன். புதுமையாக நடிக்க விரும்புகிறேன்.”

இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.