சினிமா செய்திகள்
“பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறேன்”-நடிகை ஸ்ரீரெட்டி

தெலுங்கு பட உலகில் பாலியல் தொல்லை இருப்பதாக குற்றம்சாட்டி இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டவர் நடிகை ஸ்ரீரெட்டி.
பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று புகார் கூறினார். பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் பெயர் பட்டியலையும் ஸ்ரீலீக்ஸ் முகநூல் பக்கத்தில் வெளியிட்டு அதிர வைத்தார்.

இதனால் தெலுங்கு நடிகர் சங்கம் அவருக்கு சினிமாவில் நடிக்க தடை விதித்தது. மகளிர் ஆணையம், பாலியல் புகாரை விசாரிக்க தொடங்கியதும் ஸ்ரீரெட்டிக்கு எதிரான தடையை நீக்கி படங்களில் அவர் தொடர்ந்து நடிக்கலாம் என்று அறிவித்தனர். ஆனாலும் ஸ்ரீரெட்டிக்கு படங்கள் இல்லை. செக்ஸ் புகாருக்கு பிறகு அவரை இயக்குனர்கள் ஒதுக்குகிறார்கள்.

பெரிய தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறியதால் மற்ற பட அதிபர்களும் தங்கள் படங்களில் ஸ்ரீரெட்டியை ஒப்பந்தம் செய்ய மறுக்கிறார்கள். பெரிய நடிகர்களும் தங்கள் படங்களில் ஸ்ரீரெட்டி நடிப்பதை விரும்பவில்லை. பிரபல தெலுங்கு இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது படத்தில் ஸ்ரீரெட்டியை நடிக்க வைப்பதாக வாக்குறுதி அளித்து இருந்தார். ஆனால் அவரும் தற்போது கண்டுகொள்ளவில்லை.

இதனால் கடந்த சில மாதங்களாக ஸ்ரீரெட்டிக்கு வருமானம் இல்லை. அன்றாட வாழ்க்கை செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஸ்ரீரெட்டி தனது பேஸ்புக் பக்கத்தில், “நான் செலவுக்கு பணம் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறேன். சினிமாவிலும் எனக்கு வேலை இல்லாமல் செய்துவிட்டனர். என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய தெலுங்கு பட உலகுக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.