சினிமா செய்திகள்
‘ஜுராசிக் வேல்டு-2’ ரூ.3,000 கோடி வசூல் சாதனை

‘ஜுராசிக் வேல்டு’ ஹாலிவுட் படம் கோலின் ட்ரெவோரோவ் இயக்கத்தில் 2015-ல் வெளியாகி உலகம் முழுவதும் பெரிய வசூல் சாதனை நிகழ்த்தியது.
இதில் கிறிஸ் பிராட், பிரைஸ் டல்லாஸ் ஆகியோர் நடித்து இருந்தனர். இந்த படத்தின் இரண்டாம் பாகம் ‘ஜுராசிக் வேல்டு பாலன் கிங்டம்’ என்ற பெயரில் தயாராகி இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியானது.

முதல் பாகத்தில் நடித்தவர்களே இதிலும் நடித்து இருந்தனர். பயோனா டைரக்டு செய்து இருந்தார். உலக கால்பந்து போட்டி காரணமாக அமெரிக்காவில் மட்டும் தாமதமாக கடந்த வாரம் இந்த படம் திரைக்கு வந்தது. இந்தியா மற்றும் சீனாவில் ஜுராசிக் வேல்டு பாலன் கிங்டம் படம் ரூ.1,500 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது.

பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, பெல்ஜியம், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலும் படத்துக்கு பெரிய வரவேற்பு இருந்தது. அமெரிக்காவில் 140 மில்லியன் டாலருக்கு மேல் வசூலித்துள்ளது. உலகம் முழுவதும் இதுவரை ‘ஜுராசிக் வேல்டு பாலன் கிங்டம்’ படம் ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.