சினிமா செய்திகள்
குப்பை வீசியதை வீடியோவாக வெளியிட்ட நடிகை அனுஷ்கா சர்மா-விராட் கோலிக்கு நோட்டீஸ்

பிரபல இந்தி நடிகையும், கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா தூய்மை இந்தியா திட்டத்தில் தூதுவராக இருக்கிறார்.
 நாடு முழுவதும் தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இவர் சமீபத்தில் தனது கணவருடன் காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது முன்னால் சென்ற சொகுசு காரில் இருந்தவர் சாலையில் குப்பையை வீசினார். அதை பார்த்ததும் அனுஷ்கா ஆவேசமானார். தனது காரை குப்பையை வீசியவரின் கார் அருகே ஓட்டிச்சென்று கார் கண்ணாடியை திறந்து அந்த நபரை கண்டித்தார். குப்பைகளை தொட்டியில்தான் போட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இந்த சம்பவத்தை விராட் கோலி வீடியோவில் பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். “உயர்தரமான சொகுசு கார்களில் பயணிக்கிறார்கள். ஆனால் மூளையை இழந்து விடுகிறார்கள். இவர்கள் நமது நாட்டை சுத்தமாக வைத்துக்கொள்வார்களா? இவர்களை பார்த்தால் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்” என்ற கருத்தையும் பதிவு செய்து இருந்தார். இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அனுஷ்கா சர்மா செயலுக்கு பாராட்டுகளும் குவிந்தன.

குப்பையை வீசியதற்காக அனுஷ்கா சர்மாவால் கண்டிக்கப்பட்ட நபரின் பெயர் அர்ஹன் சிங் என்பது தெரியவந்தது. படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வருகிறார். அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வருத்தம் தெரிவித்தார். “வாகனம் ஓட்டும்போது கவனக்குறைவால் குப்பையை வீசி விட்டேன். அப்போது அனுஷ்கா சர்மா என்னை கண்டித்தார். எனது தவறுக்காக மன்னிப்பு கேட்டு விட்டேன். அனுஷ்கா என்னிடம் பொறுமையாக பேசி இருக்கலாம். இதற்காக அவர் ஒன்றும் குறைந்துபோய் இருக்க மாட்டார்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் வீடியோவை வெளியிட்டு தன்னை அவமானப்படுத்தி விட்டதாக அனுஷ்கா சர்மாவுக்கும் விராட் கோலிக்கும் அர்ஹன் சிங் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அடுத்து அவர்கள் மீது வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளார். இது இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.