சினிமா செய்திகள்
‘பாரீஸ் பாரீஸ்’ படத்தில்சவாலான வேடத்தில் காஜல் அகர்வால்!

தமிழில் காஜல் அகர்வால் நடிக்கும் படத்துக்கு, ‘பாரீஸ் பாரீஸ்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
2013-ம் ஆண்டு கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியான ‘குயின்’ (இந்தி) படம் அனைத்து தரப்பினரின் வரவேற்பையும், பாராட்டையும் பெற்று, வசூல் சாதனை செய்தது. இப்போது அந்த படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் மனு குமரன் தயாரிக்கிறார். தமிழில் தயாராகும் படத்துக்கு, ‘பாரீஸ் பாரீஸ்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

தெலுங்கில், ‘தட்ஸ் மகாலட்சுமி’ என்ற பெயரிலும், கன்னடத்தில், ‘பட்டர்பிளை’ என்ற பெயரிலும், மலையாளத்தில், ‘ஜாம் ஜாம்’ என்ற பெயரிலும் இந்த படம் தயாராகிறது. தமிழில் காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, கன்னடத்தில் பருல் யாதவ், மலையாளத்தில் மஞ்சிமா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார்கள். தமிழ், கன்னடம் ஆகிய 2 மொழி படங்களை நடிகர் ரமேஷ் அரவிந்த் டைரக்டு செய்கிறார்.

‘பாரீஸ் பாரீஸ்’ படத்தில் நடிப்பது பற்றி காஜல் அகர்வால் கூறியதாவது:-

“குயின் படத்தில் கங்கனா ரணாவத் நடிப்பை பார்த்து பிரமித்தேன். இப்படிப்பட்ட சவாலான வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது, என் நீண்ட கால ஆசை. என்றாலும், இந்த படக்குழுவினர் என்னை அணுகியபோது சிறு தயக்கத்துடனே ஒப்புக்கொண்டேன். ஆனால், இப்போது படம் வளர்ந்திருப்பதை பார்க்கையில், எனக்கு மிகவும் திருப்தி.

ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு நாயகி நடிப்பது, வரவேற்க தக்கது. தமிழ் பதிப்பில் நான் கதாநாயகியாக நடிப்பது, பெருமையாக இருக்கிறது. படத்தின் டைரக்டர் ரமேஷ் அரவிந்த், ஒரு நடிகர் என்பதால் ரசிகர்களின் ரசனையை அறிந்து இயக்குகிறார். அவருடன் பணியாற்றியதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.”