சினிமா செய்திகள்
உடல் நிலை குறித்து வதந்தி: ‘‘நான் நலமாக இருக்கிறேன்’’ –பின்னணி பாடகி எஸ்.ஜானகி

இந்தியாவின் புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகி எஸ்.ஜானகி. தமிழ், தெலுங்கு, கன்னடம், தெலுங்கு, இந்தி மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார்.
 ‘பதினாறு வயதினிலே’ படத்தில் இடம்பெற்ற ‘செந்தூரப்பூவே செந்தூரப்பூவே’, தேவர் மகன் படத்தில் வரும் ‘இஞ்சி இடுப்பழகா’ பாடல்கள் மற்றும் தெலுங்கிலும், மலையாளத்திலும் தலா 1 பாடல்கள் என்று 4 தடவை தேசிய விருதுகள் பெற்றுள்ளார். எஸ்.ஜானகிக்கு தற்போது 80 வயது ஆகிறது. மகன் முரளி கிருஷ்ணாவுடன் ஐதராபாத்தில் வசித்து வருகிறார். 2 வாரங்களுக்கு முன்பு எஸ்.ஜானகிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பினார். அதன்பிறகு அவரது உடல்நிலை குறித்து அடிக்கடி வதந்தி பரவியது. அவர் நலமாக இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

நேற்று மீண்டும் உடல்நிலை குறித்து வதந்திகள் வெளியானது. வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் இதனை பரப்பினார்கள். இந்த நிலையில் எஸ்.ஜானகி நான் நலமாக இருக்கிறேன் என்று அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘எனது உடல்நிலை குறித்த வதந்தியால் ஏராளமானோர் எனக்கு போன் செய்து விசாரித்து அழுதார்கள். என் மீது அன்பு வைத்து இருப்பவர்களால் இதனை தாங்க முடியாது. எனவே தயவு செய்து இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நான் ஆரோக்கியத்தோடு நலமாக இருக்கிறேன்’’.

இவ்வாறு எஸ்.ஜானகி கூறினார்.