சினிமா செய்திகள்
நிரபராதி என நிரூபிக்கும் வரை சங்கத்தில் உறுப்பினராக மாட்டேன்- நடிகர் திலீப்

தான் நிரபராதி என நிரூபிக்கும் வரை எந்த சங்கத்திலும் உறுப்பினராக மாட்டேன் என மலையாள நடிகர் திலீப் கூறி உள்ளார்.
திருவனந்தபுரம்

கேரள மாநில மலையாள நடிகர்கள் சங்க அம்மாவின் தலைவராக   நடிகரும், எம்.பி.யுமான இன்னசென்ட் இருந்து வந்தார். 17 ஆண்டுகளுக்கும் மேலாக சங்கத்தின் தலைவராக இருந்த  இன்னசென்ட் உடல் நலக்குறைவு காரணமாக பதவியிலிருந்து விலகினார். 

இதையடுத்து மலையாள நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், சங்க தலைவராக நடிகர் மோகன்லால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். நடிகை ஒருவர் கடத்தல் வழக்கில் சிக்கி சிறை சென்றதால், நடிகர் சங்கத்தில் இருந்து திலீப் நீக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், மீண்டும் திலீப் சங்க உறுப்பினராக  சேர்க்கப்பட்டு உள்ளார்.

திலீப் மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்கப்பட்டது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  இது குறித்து நடிகை ரீமா கல்லிங்கல் மிகுந்த எதிர்ப்பு தெரிவித்தார். நடிகர் சங்கம் உணர்சியற்றதாக இருப்பதாக கூறினார்.  இதை தொடர்ந்து  நான்கு நடிகைகள்  சங்கத்தில் இருந்து வெளியேறினர்.  நடிகைகள் பாவனா, ரீமா கல்லிங்கல், கீது மோகன் தாஸ், ரம்யா நம்பீசன்,ஆகியோர் மலையாள நடிகர் சங்கம்  அம்மாவை விட்டு வெளியேறினர்.

அது போல் வியாழக்கிழமை, நடிகைகள்  ரேவதி, பத்மப்ரியா மற்றும் பார்வதி ஆகியோர்  ஒரு கடிதத்தை மோகன்லாலிடம் வழங்கினர் அதில் திலீப்   மீண்டும் சேர்க்கப்பட்டது குறித்த  முடிவைப் பற்றி ஆலோசிக்க அவசரகால நிர்வாகக் கூட்டம் ஒன்றை கூட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

இந்த விவகாரத்தில் நடிகர் சங்க தலைவர் மோகன்லாலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வருகிறது.

இதை தொடர்ந்து  தான் நிரபராதி என நிரூபிக்கும் வரை சங்கத்தில் உறுப்பினராக மாட்டேன் என நடிகர் திலீப் கூறி உள்ளார். நான் குற்றமற்றவன்  என நிரூபிக்கப்படும் வரை எந்தச் சங்கத்திலும் செயலில் ஈடுபட நான் விரும்ப வில்லை என் கூறினார்.
 
முன்னதாக நடிகர் சங்கம் தன்னை சேர்த்து கொள்ளும் முடிவு எடுத்ததற்கு திலீப் தந்து பேஸ்புக்கில் சங்கத்திற்கு  நன்றி தெரிவித்து இருந்தார்.