சினிமா செய்திகள்
போதை மருந்து கடத்தும் சர்ச்சை கதை? நயன்தாரா படத்துக்கு ‘யு’ சான்று அளிக்க மறுப்பு

சமீபகாலமாக வித்தியாசமான கதைகளை தேர்வு செய்யும் நயன்தாரா ‘கோலமாவு கோகிலா’ என்ற கதாநாயகன் இல்லாத படத்தில் நடித்து முடித்துள்ளார்.
காமெடி நடிகர் யோகிபாபு, சரண்யா ஆகியோரும் இதில் உள்ளனர். நெல்சன் இயக்கி உள்ளார். போதை மருந்துகள் கடத்தலை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளதாகவும், நயன்தாரா போதை மருந்து கடத்தும் பெண்ணாக நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கு பட உலகில் போதை பொருள் நடமாட்டம் இருப்பது கடந்த வருடம் வெளிச்சத்துக்கு வந்தது. பிரபலங்களுக்கு போதை பொருட்களை சப்ளை செய்தவர்களை கைது செய்தனர். அதுபோல் நயன்தாராவும் போதை பொருள் கடத்தல் கும்பலிடம் வேலைக்கு சேர்ந்து பிழைப்புக்காக போதை பொருள் விற்பனை செய்பவராகவும் இறுதியில் அவர்களை பிடிக்க எப்படி உதவுகிறார் என்பது போன்றும் திரைக்கதை அமைத்து இருப்பதாக பேசப்படுகிறது.

நயன்தாராவை ஒரு தலையாக காதலிப்பவராக யோகிபாபு நடித்துள்ளார். நயன்தாராவை நினைத்து கல்யாண வயசுதான் வந்திடுச்சு என்று அவர் பாடும் பாடல் சமூக வலைத்தளங்களில் பெரிய வரவேற்பை பெற்றது. காமெடி நடிகருடன் காதல் காட்சியில் நடித்ததற்காக நயன்தாராவை பாராட்டவும் செய்தார்கள்.  

இந்த படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைத்தனர். தணிக்கை அதிகாரிகளும், உறுப்பினர்களும் படத்தை பார்த்து போதை பொருள் சர்ச்சை கதை என்பதால் ‘யு ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். படக்குழுவினர் ‘யு’ சான்று அளிக்கும்படி வற்புறுத்தியும் தணிக்கை குழுவினர் மறுத்து விட்டனர். இந்த படத்தை அடுத்த மாதம் திரைக்கு கொண்டு வருகிறார்கள்.