சினிமா செய்திகள்
ரஜினி, கமல் படங்களை இயக்கிய டைரக்டர் தியாகராஜன் மரணம்

பிரபல டைரக்டர் ஆர்.தியாகராஜன் சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75.
போரூர் சக்தி நகரில் உள்ள காவ்யா கார்டனில் குடும்பத்துடன் வசித்து வந்த தியாகராஜனுக்கு நேற்று அதிகாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை ராமச்சந்திரா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே உயிர் பிரிந்தது.

மரணம் அடைந்த தியாகராஜன் பிரபல தயாரிப்பாளர் மறைந்த சாண்டோ சின்னப்பா தேவரின் மருமகன் ஆவார். அவரது மூத்த மகள் சுப்புலட்சுமியை திருமணம் செய்து இருந்தார். இவர்களுக்கு வேல்முருகன் என்ற மகனும், சண்முக வடிவு என்ற மகளும் உள்ளனர். தியாகராஜன் தமிழ், தெலுங்கு, இந்தியில் 35 படங்கள் டைரக்டு செய்துள்ளார்.

ரஜினிகாந்த் நடித்த அன்னை ஓர் ஆலயம், தாய்வீடு, தாய்மீது சத்தியம், அன்புக்கு நான் அடிமை, ரங்கா ஆகிய படங்களையும், கமல்ஹாசன் நடித்துள்ள தாயில்லாமல் நான் இல்லை, ராம் லட்சுமண் ஆகிய படங்களையும் டைரக்டு செய்து இருக்கிறார். விஜயகாந்த் நடித்துள்ள அன்னை பூமி, நல்லநாள் ஆகிய படங்களையும் இயக்கி உள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தியில் வசூல் சாதனை நிகழ்த்திய ஆட்டுக்கார அலமேலு மற்றும் வெள்ளிக்கிழமை விரதம் ஆகிய படங்களையும் டைரக்டு செய்துள்ளார். தியாகராஜன் உடல் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. திரையுலகினர் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். அவரது உடல் இன்று காலை ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.