ஜெயலலிதாவாக நடிக்க விரும்பும் மஞ்சிமா மோகன்

திரையுலக சாதனையாளர்கள் வாழ்க்கை படங்களாகி வெளிவருகின்றன. மறைந்த சில்க் ஸ்மிதா வாழ்க்கை ‘த டர்டி பிக்சர்’ என்ற பெயரில் படமாகி திரைக்கு வந்தது.

Update: 2018-07-01 23:00 GMT
சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்த வித்யாபாலனுக்கு தேசிய விருது  கிடைத்தது.

நடிகையர் திலகம் என்று பாராட்டு பெற்ற சாவித்திரியின் வாழ்க்கையை தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும், தெலுங்கில் மகாநதி என்ற பெயரிலும் படமாக எடுத்து வெளியிட்டனர்.

 சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். இந்த படத்துக்கு இரு மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. சஞ்சய்தத் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான சஞ்சு படத்தில் அவரது கதாபாத்திரத்தில் ரன்பீர்கபூர் நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் சாதனைகள் நிகழ்த்திய மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் வாழ்க்கையும் படமாகிறது.

மறைந்த ஆந்திர முன்னாள் முதல்–மந்திரியும், பிரபல தெலுங்கு நடிகருமான என்.டி.ராமராவ் வாழ்க்கை படமாகி வருகிறது. இதில் என்.டி.ராமராவாக அவரது மகன் பாலகிருஷ்ணா நடிக்கிறார். மலையாள பட உலகில் கவர்ச்சியாக நடித்து முன்னணி நடிகர்கள் படங்களை வசூலில் பின்னுக்கு தள்ளிய ‌ஷகிலாவின் வாழ்க்கையும் படமாக எடுத்துள்ளனர். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

மறைந்த முதல்– அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையையும் படமாக எடுக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. இதில் அவரது கதாபாத்திரத்தில் வித்யாபாலன் அல்லது கீர்த்தி சுரேஷ் நடிக்கலாம் என்று பேசப்பட்டது. இந்த நிலையில் நடிகை மஞ்சிமா மோகன் ஜெயலலிதா வாழ்க்கை கதை படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க விரும்புவதாக தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர்  கூறும்போது, ‘‘ஜெயலலிதா வாழ்க்கை கதை படத்தில் அவரது வேடத்தில் நடிக்க ஆசை உள்ளது. ஜெயலலிதாவின் தைரியம் எனக்கு பிடிக்கும். தனது முடிவில் இருந்து எந்த காரணத்துக்காகவும் அவர் பின்வாங்க மாட்டார். அவருடைய தைரியம் எல்லா பெண்களுக்கும் இருக்க வேண்டும்’’ என்றார்.

மேலும் செய்திகள்