பாலியல் வழக்கில் சிக்கிய திலீப்பை நடிகர் சங்கத்தில் சேர்த்தது ஏன்? மோகன்லால் விளக்கம்

நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி கைதானதால் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கி வைக்கப்பட்ட திலீப்பை புதிய தலைவர் பொறுப்பை ஏற்றுள்ள மோகன்லால் மீண்டும் சங்கத்தில் சேர்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

Update: 2018-07-01 23:15 GMT
திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சுவாரியரை தலைவராக கொண்டு செயல்படும் பெண்கள் சினிமா கூட்டுக்குழு கண்டனம் தெரிவித்தது.

நடிகைகள் ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ், ரீமா கல்லிங்கல் ஆகியோர் மலையாள நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்கள். கடத்தலுக்கு உள்ளான நடிகையும் சங்கத்தில் இருந்து விலகினார். குற்றவாளிக்கு நடிகர் சங்கம் பாதுகாப்பாக இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினார்கள். கேரள முன்னாள் முதல்–மந்திரி அச்சுதானந்தன் நடிகைகள் ராஜினாமா செய்ததை வரவேற்றார்.

சமூக வலைத்தளங்களில் மோகன்லால் நடவடிக்கையை பலரும் விமர்சித்தனர். இதனால் திலீப் பணிந்து நீதிமன்றத்தில் குற்றவாளி இல்லை என்று நிரூபிப்பது வரை சங்கத்தில் சேர மாட்டேன் என்று அறிவித்தார்.

இந்த நிலையில் திலீப்பை சங்கத்தில் சேர்த்தது ஏன்? என்பதை விளக்கி நடிகர் மோகன்லால் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

‘‘பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் திலீப் கைது செய்யப்பட்டதும் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார். இது ஜனநாயக நடவடிக்கை. ஆனால் தற்போது நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் திலீப்பை சங்கத்தில் மீண்டும் சேர்க்கலாம் என்று ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது. யாரும் எதிர்க்கவில்லை. எனவேதான் அவரை சங்கத்தில் சேர்த்தோம்.

இதை திலீப்பிடமே அலுவல் ரீதியாக இன்னும் தெரிவிக்கவில்லை. இதை ஊடகங்கள் சங்கத்துக்கு எதிராக பயன்படுத்தி விட்டன. உண்மை நிலவரம் தெரியாமலே பலரும் எதிர்க்க தொடங்கி விட்டனர். எனது உருவப் பொம்மையையும் எரிக்கிறார்கள். எதிர்ப்பவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து அவர்கள் முடிவு குறித்து ஆராயவும் மாறுபட்ட கருத்துக்களை ஏற்கவும் தயாராக இருக்கிறோம்.’’

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

திலீப் சேர்க்கப்பட்டதை மறுபரிசீலனை செய்து சங்கத்தில் இருந்து மீண்டும் அவரை நீக்குவது குறித்து சங்க நிர்வாகிகள் ஆலோசித்து வருவதாக மலையாள பட உலகில் பேசப்படுகிறது.

மேலும் செய்திகள்