‘‘சினிமா தலைப்பு பதிவு முறைகேடுகளை தடுக்க வேண்டும்’’ பட விழாவில் டைரக்டர் பாக்யராஜ் பேச்சு

சினிமா தலைப்பு பதிவு முறைகேடுகளை தடுக்க வேண்டும் என்று பட விழாவில் டைரக்டர் பாக்யராஜ் பேசினார்.

Update: 2018-07-06 22:30 GMT
ஸ்ரீ ஐஸ்வர்ய ஜனனி கிரியேசன்ஸ் சார்பில் ஜனனி கே.பாலு மற்றும் வீடு புரொட‌ஷன்ஸ் சார்பில் தினேஷ் குமார் தயாரித்துள்ள படம் ‘‘வெடிகுண்டு பசங்க’’. பெண் இயக்குனர் விமலா பெருமாள் டைரக்டு செய்துள்ளார். கதாநாயகனாக தினேஷ் குமார், நாயகியாக சங்கீதா கிருஷ்ணசாமி  நடித்துள்ளனர். விவேக்–மெர்வின் இசையமைத்துள்ளனர். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. 

விழாவில் நடிகர் நாசர் கலந்துகொண்டு பேசும்போது, ‘‘மலேசிய தமிழர்கள் தமிழ்த் திரையுலகினருக்கு பலமாகவும், முதுகெலும்பாகவும் விளங்குபவர்கள். அங்கிருந்து இந்த படம் வந்துள்ளது மகிழ்ச்சி. உங்களுடைய கலாசாரம், வாழ்வியல் சார்ந்த படங்களை உருவாக்குங்கள். அதைப் பார்க்க நாங்கள் ஆசைப்படுகிறோம்’’ என்றார். 

டைரக்டர் பாக்யராஜ் பேசியதாவது:–

மலேசிய தமிழர்கள் எடுத்துள்ள ‘வெடிகுண்டு பசங்க’ பாடல்கள், படத்தைப் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வத்தைத் தூண்டுகிறது. மலேசியாவில் உள்ள வாழ்வியலை ஒட்டி பொழுதுபோக்கிற்கான அம்சங்களுடன் படம் இருந்தால் நிச்சயம் ரசிகர்கள் விரும்புவார்கள். 

இங்கு தலைப்பு பதிவு செய்வதில் உள்ள சிக்கல்களைப் பற்றி பேசினார்கள். முறையாக பதிவு செய்யப்பட்ட தலைப்புகளை நோட்டீஸ் போர்டில் வெளிப்படையாக போட வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் தலைப்பு வி‌ஷயத்தில் நடக்கிற கமி‌ஷன் சமாச்சாரங்களைக் கட்டுப்படுத்தலாம். இப்போதிருக்கும் சினிமா சூழலில் நூறு நாட்கள் ஓடுவது என்பது சாத்தியமில்லை. 

திருட்டு விசிடி, இணையத் திருட்டு போன்றவற்றை தாண்டியும், படம் தரமானதாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக வெற்றி பெறும். இப்படத்தின் பாடல்களைப் பார்க்கும்போது தொழில்நுட்ப ரீதியாக தரமான படைப்பாகவே இருக்கிறது. எனவே இந்த ‘‘வெடிகுண்டு பசங்க’’ வெற்றிபெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.

இவ்வாறு பாக்யராஜ் பேசினார்.

மேலும் செய்திகள்