போதை மருந்து விற்கும் சர்ச்சை கதாபாத்திரம் நடிகை நயன்தாராவுக்கு எதிர்ப்பு

நயன்தாரா போதை மருந்து விற்கும் கதாபாத்திரத்துக்கு விமர்சனங்கள் கிளம்பி உள்ளன.

Update: 2018-07-06 23:00 GMT
நயன்தாரா சமூக அக்கறையுள்ள கலெக்டராக அறம் படத்தில் வந்து ரசிகர்களை கவர்ந்தார். காதுகேளாத பெண், குழந்தைக்கு தாய், பழிவாங்கும் பேய் போன்ற அழுத்தமான கதாபாத்திரங்களையும் செய்தார். அதேவேளை சில சர்ச்சை வேடங்களில் நடித்து எதிர்ப்புகளையும் சம்பாதிக்கிறார்.

ஏற்கனவே டாஸ்மாக் கடைக்கு சென்று பீர்வாங்குவது போன்ற காட்சியில் நடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அவருக்கு சமூக ஆர்வலர்களிடம் இருந்தும் பெண்கள் அமைப்பினரிடம் இருந்தும் கண்டனங்கள் குவிந்தன. பெண்களை மதுகுடிக்க தூண்டுகிறார் என்றும் அவர் மீது குற்றம் சாட்டினர். அந்த காட்சியை நானும் ரவுடிதான் படத்துக்காக எடுத்து இருந்தனர். 

திருநாள், ராஜா ராணி படங்களிலும் கையில் பீர்பாட்டிலுடன் தோன்றினார். இப்போது போதை மருந்து விற்கும் பெண்ணாக கோலமாவு கோகிலா படத்தில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் அதை உறுதிபடுத்தி இருக்கிறது. கோலமாவு விற்பவரைபோல் நடமாடி பைக்குள் கோலமாவுக்கு பதிலாக கஞ்சா, போதை பவுடர் போன்றவற்றை கடத்துவதுபோல் நயன்தாரா நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. 

வறுமையால் இந்த தொழிலை அவர் செய்வது போன்று காட்சி வைத்துள்ளனர். இதில் கதாநாயகன் இல்லை. நயன்தாராவை ஒருதலையாக காதலிப்பவராக நகைச்சுவை நடிகர் யோகிபாபு வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராகிறது. நயன்தாரா போதை மருந்து விற்கும் கதாபாத்திரத்துக்கு விமர்சனங்கள் கிளம்பி உள்ளன. சிலர் எதிராகவும் சமூக வலைத்தளத்தில் பேசி வருகிறார்கள்.  வழக்கமாக நயன்தாரா படங்களுக்கு ‘யு’ சான்றிதழ் கிடைக்கும். ஆனால் இந்த படத்துக்கு தணிக்கை குழு ‘யு’ சான்று அளிக்க மறுத்து ‘யூஏ’ சான்றிதழ் வழங்கி இருக்கிறது.

மேலும் செய்திகள்