புகை பிடிக்கும் காட்சியை நீக்கும்படி விஜய், ஏ.ஆர். முருகதாசுக்கு நோட்டீஸ்

விஜய் புகைபிடிக்கும் காட்சியை நீக்கும்படி விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோருக்கு தமிழக பொதுசுகாதார துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Update: 2018-07-07 00:15 GMT
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘சர்கார்’ படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்தின் முதல் தோற்றம் கடந்த மாதம் 21–ந் தேதி வெளியானது. அதில் விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சி இடம்பெற்று இருந்தது. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. பா.ம.க உள்ளிட்ட சில கட்சிகளும் கண்டித்தன. 

விஜய் புகைபிடிக்கும் காட்சி இளைஞர்களை புகைபிடிக்க ஊக்குவிப்பதுபோல் அமைந்து விடும் என்றும் அந்த காட்சியை நீக்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டன. இதனால் ‘சர்கார்’ படத்துக்கு சர்ச்சை ஏற்பட்டது. புகைபிடிக்கும் காட்சி போஸ்டரில் மட்டுமே இடம் பெற்றுள்ளது என்றும் படத்தில் அது இருக்காது என்றும் கூறப்பட்டது. 

இந்த நிலையில் விஜய் புகைபிடிக்கும் காட்சியை நீக்கும்படி விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோருக்கு தமிழக பொதுசுகாதார துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 

‘‘புகைபிடிக்கும் விஜய்யின் படத்தை இணையதளங்களில் இருந்தும் சமூக வலைத்தளங்களில் இருந்தும் உடனே நீக்க வேண்டும். அதனை நீக்காவிட்டால் சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும். புகைப்பழக்கத்தை ஒழிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. திரைத்துறையை சார்ந்தவர்கள் அதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்று நோட்டீசில் குறிப்பிடப்பட்டு உள்ளது. படத்தின் தயாரிப்பாளருக்கும் இதை அனுப்பி உள்ளனர்.

 இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து புகைபிடிக்கும் சர்ச்சை போஸ்டரை நீக்குவது குறித்து படக்குழுவினர் ஆலோசித்தனர். இந்த நிலையில் நேற்று மாலை படநிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் இருந்து விஜய் புகைப்பிடிக்கும் போஸ்டர் திடீரென்று நீக்கப்பட்டது. ‘சர்கார்’ படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இதன் பெரும்பகுதி படப்பிடிப்புகள் முடிந்து விட்டன. 

இதில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். விவசாயம் சம்பந்தமான பிரச்சினையை படத்தில் மையப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. அரசியல் வி‌ஷயங்களும் படத்தில் உள்ளன. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

மேலும் செய்திகள்