‘சூனியம் வைத்து எனது வீட்டை அபகரிக்க முயற்சி’ நடிகை ஜெயசித்ரா பேட்டி

‘சூனியம் வைத்து எனது வீட்டை அபகரிக்க முயற்சி நடக்கிறது’ என்று நடிகை ஜெயசித்ரா கூறினார்.

Update: 2018-07-07 00:00 GMT
சென்னை, 

பழம்பெரும் நடிகை ஜெயசித்ரா சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

சினிமா பைனான்சியர் அசோக் லோதா என்பவர் சென்னை யானைக்கவுனி போலீஸ்நிலையத்தில் தன்னை கார் புரோக்கர் இளம்முருகன் என்பவர் காசோலை கொடுத்து மோசடி செய்துவிட்டதாக புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரில் என்னிடமும் (ஜெயசித்ரா), இன்னொரு நடிகரிடமும் இளம்முருகன் மோசடி செய்திருந்தார் என்று கூறியிருந்தார். போலீசார் விசாரித்து இளம்முருகனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

என்னிடம் இளம்முருகன் மோசடி செய்தது உண்மை தான். எனது வீட்டை அபகரிக்க முயற்சி செய்தார். சென்னை ரங்கராஜபுரத்தில் 750 சதுரடியில் எனக்கு சொந்தமான வீடு உள்ளது.

அந்த வீட்டில் இளம்முருகனும், அவரது மனைவி மீனா இளம்முருகனும் வாடகைக்கு இருந்தனர். 12 ஆண்டுகளாக எனக்கு வாடகை தராமல் ஏமாற்றினார்கள்.

வீட்டையும் காலி செய்ய மறுத்தனர். இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, குறிப்பிட்ட தொகையை வாங்கினேன். இன்னும் ரூ.7 லட்சம் பாக்கி உள்ளது.

இளம்முருகன் வீட்டை காலி செய்து என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனாலும் அவர் காலி செய்யவில்லை. எனக்கு வங்கி மூலம் பணம் தந்ததாக கோர்ட்டையும் ஏமாற்றினார். வருகிற 20-ந்தேதி வரை அவருக்கு கோர்ட்டு கெடு விதித்துள்ளது.

அதன்பிறகும் காலி செய்யாவிட்டால் பூட்டை உடைத்து உள்ளே செல்லலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இளம்முருகனால் நான் பெரியளவில் மனஉளைச்சலுக்கு ஆளானேன். அந்த வீட்டை எப்படியாவது அபகரித்து விட வேண்டும் என்று திட்டமிட்டார். இதற்காக எனக்கு எதிராக வீட்டை சுற்றி சூனியம் வைக்கப்பட்டது. வீடும் சேதப்படுத்தப்பட்டது. கோர்ட்டு மூலம் எனக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்