“விவசாயம் செய்ய ஆசைப்படுகிறேன்” -நடிகர் கார்த்தி

விவசாயம் செய்ய ஆசைப்படுவதாக நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.

Update: 2018-07-08 23:30 GMT
பாண்டிராஜ் இயக்கத்தில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்துள்ளார் கார்த்தி. நாயகியாக சாயிஷா நடித்துள்ளார். சத்யராஜ், பிரியா பவானி சங்கர், பானுப்ரியா, சூரி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்கள். நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். படக்குழுவினர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது நடிகர் கார்த்தி கூறியதாவது:-

“விவசாயம் சம்பந்தமான கிராமத்து கதை ‘கடைக்குட்டி சிங்கம்’. குடும்ப படமாக வந்துள்ளது. இந்த படத்தை பார்த்த பிறகு நகரத்தில் வசிப்பவர்கள் கிராமத்துக்கு செல்ல ஆசைப்படுவார்கள். 30-க்கும் மேற்பட்டவர்கள் நடித்துள்ளனர். குடும்ப உறவுகளின் சிறப்புகளையும் சொல்லி இருக்கிறோம்.

சத்யராஜ் இன்னொரு படத்தில் கதாநாயகனாக நடிப்பதால் இந்த படத்தில் நடிப்பதற்கு மறுத்தார். கதையை சொன்னதும் பிடித்துபோய் நடிக்க சம்மதித்தார். அவருடைய கதாபாத்திரம் படத்துக்கு பெரிய பலமாக இருக்கும். சீனியர் நடிகரான அவர் படப்பிடிப்பு அரங்கில் எளிமையாகவே நடந்து கொண்டார். ஒரு நடிகர் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது.

கதாநாயகி சாயிஷா திறமையாக நடனம் ஆடுபவர். அவருடன் சேர்ந்து ஆட கஷ்டமாக இருந்தது. எனக்காக மெதுவாக ஆடினார். வசனமும் நடிப்போடு சேர்ந்து இயல்பாக இருக்கும். கிராமத்தை வைத்து நிறைய படங்கள் எடுக்க முடியும். ஆனால் இப்போதுள்ள சில இயக்குனர்களுக்கு கூட்டு குடும்பங்கள் பற்றியே தெரியாது.

இந்த படம் விவசாயம், கூட்டு குடும்பங்களின் மகத்துவம் போன்றவற்றை ஞாபகப்படுத்தும். சூர்யாவும் ஒரு காட்சியில் வருகிறார். எனக்கு விவசாயம் பிடிக்கும். விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் நேரம் இல்லை. இப்போதும் கிராமத்துக்கு சென்றால் மண்வெட்டி பிடித்து விவசாய வேலைகளை செய்கிறேன். டைரக்டராகும் எண்ணம் இல்லை.”

இவ்வாறு கார்த்தி கூறினார்.

மேலும் செய்திகள்