சினிமா செய்திகள்
கதாநாயகர்களை முந்தினார்: பிரியங்கா சோப்ரா சம்பளம் ரூ.13 கோடி

இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது ரூ. 13 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்தியாவில் இதுவரை எந்த நடிகையும் வாங்காத சம்பளம் இது.
இந்தி நடிகைகள் சம்பள பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் பிரியங்கா சோப்ரா. இதுவரை ரூ.10 கோடி ரூ.11 கோடி என்று வாங்கிய அவர் இப்போது சல்மான்கானுடன் ஜோடியாக நடிக்கும் ‘பாரத்’ படத்துக்கு ரூ.13 கோடி கேட்டு இருப்பதாக தகவல். இந்தியாவில் இதுவரை எந்த நடிகையும் வாங்காத சம்பளம் இது.

முன்னணி நடிகர்களுக்கு அடுத்த வரிசையில் இருக்கும் கதாநாயகர்கள் ரூ.10 கோடிக்கு குறைவாகவே சம்பளம் பெறுகின்றனர். அவர்களை பிரியங்கா சோப்ரா முந்தி இருக்கிறார். தீபிகா படுகோனே சமீபத்தில் வெளியான பத்மாவத் படத்துக்கு ரூ.12 கோடி வாங்கியதாக கூறப்பட்டது. இதுவரை முதல் இடத்தில் இருந்த அவர் இப்போது இரண்டாம் இடத்துக்கு வந்துள்ளார். கங்கனா ரணாவத் ரூ.11 கோடி வாங்குகிறார்.

பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் சென்று குவாண்டிகோ தொடரில் நடித்த பிறகே அவரது மார்க்கெட் உயர்ந்தது. உலக அளவில் ரசிகர்கள் கிடைத்துள்ளதால் அவர் கேட்ட தொகையை கொடுக்க தயாரிப்பாளர்களும் முன்வருகிறார்கள். பிரியங்கா சோப்ராவுக்கும் அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாசுக்கும் காதல் மலர்ந்து ஜோடியாக சுற்றி வருகிறார்கள்.

இருவரும் மும்பை வந்துள்ளனர். இவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. சல்மான்கான் படத்தில் நடிக்க சில மாதங்கள் மும்பையில் தங்குவது என்றும் பிறகு அமெரிக்கா செல்லவும் பிரியங்கா சோப்ரா திட்டமிட்டு உள்ளார்.