நடிகை கடத்தல் வழக்கு: திலீப்பை நடிகர் சங்கத்தில் சேர்க்க மாட்டோம் மோகன்லால் திடீர் அறிவிப்பு

நடிகை கடத்தல் வழக்கில் சிக்கியதால் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து திலீப் நீக்கி வைக்கப்பட்டு இருந்தார்.

Update: 2018-07-09 22:15 GMT
நடிகை கடத்தல் வழக்கில் சிக்கியதால் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து திலீப் நீக்கி வைக்கப்பட்டு இருந்தார். மோகன்லால் சங்கத்துக்கு புதிய தலைவராக பொறுப்பு ஏற்றதும் திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்துக்கொண்டார். இது மலையாள பட உலகில் சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகைகள் ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ், ரீமா கல்லிங்கல் ஆகியோர் மோகன்லால் செயலை கண்டித்தனர். திலீப்பை சேர்த்ததை எதிர்த்து நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் தலைமையில் செயல்படும் மலையாள சினிமா பெண்கள் குழுவும் இதனை விமர்சித்தது. மேலும் 14 நடிகைகள் எதிர்ப்பு குரல் எழுப்பினார்கள்.

அதிருப்தியாளர்கள் இணைந்து போட்டி சங்கத்தை உருவாக்க முயற்சித்தனர். இதனால் மலையாள நடிகர் சங்கம் உடையும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் மோகன்லால் நேற்று திடீரென்று கொச்சியில் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“மலையாள நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கடந்த 24-ந் தேதி நடந்தது. அந்த கூட்டத்தில் திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்துக்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது. ஒருமனதாகவே இந்த முடிவை எடுத்தோம். திலீப் சங்கத்தில் சேர விருப்பம் இல்லை என்று தெரிவித்துவிட்டார்.

நடிகை கடத்தல் மற்றும் பாலியல் தொல்லை சம்பந்தமாக திலீப் மீது கோர்ட்டில் வழக்கு உள்ளது. அதில் அவர் தன்னை குற்றமற்றவர் என்று நிரூபிப்பதுவரை சங்கத்தில் சேர்ப்பது இல்லை என்று முடிவு செய்து இருக்கிறோம். நடந்த சம்பவத்துக்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். திலீப் சேர்க்கப்பட்டதை எதிர்த்து நடிகர் சங்கத்தில் இருந்து ராஜினாமா செய்த நடிகைகளை மீண்டும் சங்கத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.”

இவ்வாறு மோகன்லால் கூறினார்.

மேலும் செய்திகள்