மறைந்த பழம்பெரும் நடிகை மதுபாலா வாழ்க்கை படமாகிறது

சினிமா உலகம் வாழ்க்கை வரலாற்று படங்கள் சீசனுக்கு மாறி இருக்கிறது. நடிகர்–நடிகைகள், அரசியல் தலைவர்கள் படங்கள் அதிகம் வருகின்றன.

Update: 2018-07-10 22:00 GMT
  சில்க் சுமிதா வாழ்க்கை த டர்ட்டி பிக்சர் என்ற பெயரில் வெளியாகி வசூல் குவித்ததில் இருந்து இந்த மோகம் திரையுலகினரை பிடித்து இருக்கிறது.

நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை படமாக்கி தமிழ், தெலுங்கில் வெளியிட்டு நல்ல வசூல் பார்த்தனர். மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கி சிறைதண்டனை அனுபவித்த இந்தி நடிகர் சஞ்சய்தத் வாழ்க்கை சஞ்சு என்ற பெயரில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் ரூ.260 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, என்.டி.ராமராவ் ஆகியோர் வாழ்க்கையும் படமாகிறது.

மறைந்த பிரபல இந்தி நடிகை மதுபாலாவின் வாழ்க்கை வரலாற்றையும் படமாக்கப்போவதாக அவரது சகோதரி மதூர் பிரிஷ் பூஜன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘மதுபாலா வாழ்க்கையை படமாக்க இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் என்னை அணுகி உரிமை கேட்டனர். உண்மைதன்மை மாறாமல் படத்தை எடுப்பார்களா? என்ற சந்தேகம் இருந்ததால் மறுத்து விட்டேன். இப்போது நானே மதுபாலா வாழ்க்கையை எனது நண்பர்களுடன் இணைந்து படமாக்கப் போகிறேன். இயக்குனர், நடிகர்–நடிகைகள் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்’’ என்றார்.

மதுபாலா இந்தி திரையுலகில் 1940, 50 மற்றும் 60–களில் புகழ்பெற்ற கதாநாயகியாக இருந்தார். நர்கீஸ், மீனாகுமாரி ஆகியோரும் இவர் காலத்து நடிகைகள்தான். அசோக்குமார், ராஜ்கபூர், திலீப்குமார், ‌ஷம்மிகபூர், தேவ் ஆனந்த் ஆகியோருடன் ஜோடியாக நடித்துள்ளார். திலீப்குமாரை காதலித்தார். பெற்றோர்கள் எதிர்ப்பால் அவரை திருமணம் செய்யவில்லை. நடிகரும், பாடகருமான கிஷோர் குமாரை மணந்தார். பின்னர் இருதய கோளாறினால் தனது 36–வது வயதில் மரணம் அடைந்தார்.

மேலும் செய்திகள்