நாடாளுமன்ற தேர்தலில் போட்டி? அரசியலுக்கு வரும் 2 நடிகர்கள்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டி? அரசியலுக்கு வரும் 2 நடிகர்கள்

Update: 2018-07-11 21:45 GMT
தெலுங்கு நடிகர் பிரபாசும், இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கும் அரசியலுக்கு வரப்போவதாக தகவல் பரவி உள்ளது. பிரபாஸ் பாகுபலி படம் மூலம் பிரபலமானார். இந்த படம் தமிழிலும் வெளியானது. உலக அளவில் வசூல் சாதனையும் நிகழ்த்தியது. தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகும் சாஹோ படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

பிரபாசின் உறவினர் கிருஷ்ணம் ராஜு, பா.ஜனதா கட்சி சார்பில் ராஜமுந்திரி தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானவர். 2019 நாடாளுமன்ற தேர்தலில் ஆந்திராவில் உள்ள காக்கிநாடா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்து இருக்கிறார். கிருஷ்ணம் ராஜுவை வைத்து பிரபாசை பா.ஜனதாவில் சேர்க்கும் முயற்சியில் மேலிட தலைவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

சமீபத்தில் பிரதமர் நரேந்திரமோடியை பிரபாஸ் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. பிரபாசுக்கு எம்.பி. தொகுதியில் போட்டியிட ‘சீட்’ கொடுத்து தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தலாம் என்பது அவர்களின் கணக்காக உள்ளது. ரிதேஷ் தேஷ்முக் இந்தி, மராத்திய மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் முன்னாள் மராட்டிய முதல்-மந்திரி விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன். நடிகை ஜெனிலியாவை திருமணம் செய்து இருக்கிறார்.

ரிதேஷ்தேஷ்முக்கும் தந்தை வழியில் அரசியலுக்கு வருகிறார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் லத்தூர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அவருக்கு ஆதரவாக ஜெனிலியா பிரசாரத்தில் ஈடுபடப்போகிறார்.

மேலும் செய்திகள்