சினிமா செய்திகள்
புற்றுநோயை எதிர்கொள்ள “ரசிகர்கள் அன்பு வலிமையை தருகிறது” -நடிகை சோனாலி பிந்த்ரே

வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழுதபடி சோனாலி பிந்த்ரே வெளியிட்டுள்ளார். ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்து உள்ளார்.
‘காதலர் தினம்’ படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை சோனாலி பிந்த்ரே கடந்த 4-ந் தேதி தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், இதற்காக நியூயார்க்கில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியிட்டு திரையுலகையும், ரசிகர்களையும் கலங்க வைத்தார்.

அவர் விரைவில் நலம்பெற சமூக வலைத்தளங்களில் பலரும் பிரார்த்தனை செய்தனர். இந்த நிலையில் சிகிச்சைக்கு முன் நீளமான தனது கூந்தலை வெட்டி குட்டையாக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழுதபடி சோனாலி பிந்த்ரே வெளியிட்டுள்ளார். ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்து உள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

“நான் விரைவில் குணமடைய ரசிகர்கள் தொடர்ந்து அன்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். அவர்களுக்கு நன்றி. என் வாழ்க்கையில் நிறைய சவாலான விஷயங்களை இப்போது பார்க்கிறேன். தினமும் ஒரு அனுபவத்தை சந்திக்கிறேன். நேர்மறையான விஷயங்களே இப்போதைய எனது எதிர்பார்ப்பாக உள்ளது. எனது வாழ்க்கை பயணத்தில் இதுவும் ஒரு பகுதியாகி விட்டது.

யாரும் எதற்காகவும் நம்பிக்கையை இழந்து விடக்கூடாது. நாம் எந்த நிலைமையில் இருக்கிறோம் என்பதை புரிந்துகொள்வது அவசியம். இந்த மாதிரி கஷ்டமான நேரத்தில் நான் தனியாக இல்லை என்பது மகிழ்ச்சி தருகிறது.

நிறைய பேர் புற்றுநோய் பாதிப்பில் இருந்த அவர்களுடைய அனுபவங்களை என்னுடன் பகிர்ந்துகொண்டார்கள். இன்னும் பலர் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு ஏற்பட்ட புற்றுநோய் பாதிப்பு குறித்த விஷயங்களை சொன்னார்கள். அவர்களுடைய அன்பும், அனுபவமும் எனக்கு கூடுதல் வலிமையை தருகிறது.”

இவ்வாறு சோனாலி பிந்த்ரே கூறியுள்ளார்.