எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களை தியேட்டர்களில் இனி பார்க்க முடியுமா?

டிஜிட்டல் முறையில் திரையிடும் கட்டணம் உயர்வால், எம்.ஜி.ஆர்., சிவாஜி நடித்த பழைய படங்களை தியேட்டர்களில் இனி பார்க்க முடியுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Update: 2018-07-12 23:00 GMT
படச்சுருள்

சினிமா துறையில் முந்தைய காலங்களில் படச்சுருள் முறை இருந்தது. அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப தற்போது சினிமா படப்பிடிப்பு, திரையிடுவது போன்றவை டிஜிட்டல் முறைக்கு போய்விட்டது.

டிஜிட்டல் திரையிடல் முறை, திரையிடுவதற்கு எளிதாக இருந்தாலும், அதற்காக வசூலிக்கப்படும் கட்டணத்தில் கட்டுப்பாடுகள் இல்லாததால் சினிமா தயாரிப்பாளர்களுக்கு பெரும் பிரச்சினையை உருவாக்கிவிட்டது.

நிர்ப்பந்தம்

டிஜிட்டல் முறையில் திரையிடுவதற்கு ஆரம்பத்தில் குறைந்த அளவில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. டிஜிட்டல் திரையீடு முறைக்கு எல்லா தியேட்டர்களுமே மாறிவிட்ட நிலையில் திரையிடும் கட்டணங்களை டிஜிட்டல் நிறுவனங்கள் உயர்த்தியபடி வந்தன.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு புதுப்படத்தை முதல் வாரத்தில் திரையிட ரூ.10 ஆயிரம், 2–ம் வாரத்தில் திரையிட ரூ.7 ஆயிரம், 3–ம் வாரத்தில் திரையிட ரூ.5 ஆயிரம், 4–வது வாரத்தில் திரையிட ரூ.3 ஆயிரம், 5–வது வாரம் திரையிட ரூ.1,750 என வசூலிக்கப்பட்டு வந்தது. பின்னர் ஒவ்வொரு வாரமும் ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று தயாரிப்பாளர்களுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டது. ஒரு படத்தை வெளியாகும் நாளில் இருந்து ஆண்டாண்டுகளாக (வெவ்வேறு தியேட்டர்களில்) திரையிட ரூ.11 ஆயிரத்து 500 செலுத்த வேண்டும் என டிஜிட்டல் நிறுவனங்கள் தெரிவித்தன.

முத்தரப்பு பேச்சு

இதை எதிர்த்து திரையுலகினர் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் வேலை நிறுத்த போராட்டத்தில் சினிமா தயாரிப்பாளர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து தயாரிப்பாளர்களையும், தியேட்டர் உரிமையாளர்களையும், டிஜிட்டல் நிறுவனத்தினரையும் அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.

இதில், சினிமாவின் ஒரு காட்சிக்கு ரூ.250, முதல் 2 வாரங்களுக்கு ரூ.5 ஆயிரம், அதற்கு அடுத்தடுத்த வாரங்களில் குறைத்தும், ஆண்டாண்டுகளாக தியேட்டர்களை மாற்றி திரையிடுவதற்கு ரூ.10 ஆயிரம் எனவும் கட்டணத்தை அரசு நிர்ணயித்தது.

ஒப்பந்தம்

மேலும் டிஜிட்டல் மாஸ் என்ற ஒளிப்பட இணைப்பு செய்ய தயாரிப்பாளர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை (முன்பு இதற்காக ரூ.25 ஆயிரம் வசூலிக்கப்பட்டது), 6 மாதங்களுக்கு இந்த ஒப்பந்தம் நீடிக்கும் என அரசு கூறியது. ஏப்ரல் மாதம் போடப்பட்ட இந்த ஒப்பந்தம் கையெழுத்து ஆகவில்லை.

இந்நிலையில் ஒப்பந்தத்தை மீறி டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் பழைய முறையில் கட்டணம் வசூலிக்க தொடங்கிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. புதிய படங்கள் வராத நிலையில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, சிவாஜி நடித்த பழைய படங்களை டிஜிட்டலுக்கு மாற்றி, வாரத்துக்கு ரூ.1,500 மட்டுமே கொடுத்து திரையிட்டு வந்தனர். ஆனால் இதற்கும் தற்போது சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

கூடுதல் வருமானம்

புதிய படங்களுக்கு வாங்கும் அதே கட்டணத்தையே பழைய படங்களுக்கும் செலுத்த வேண்டும் என்று டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் தெரிவித்தன. இதனால் பழைய படங்களை இவ்வளவு பணம் கொடுத்து யாரும் திரையிட விரும்பவில்லை. இதையடுத்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, சிவாஜி நடித்த பழைய படங்களை இனி ரசிகர்கள் பார்க்க முடியுமா? என சந்தேகம் எழுந்துள்ளது.

சினிமாவை திரையிடுவதில் தற்போதுள்ள சூழ்நிலையை மாற்ற வேண்டும் என்று அரசிடம் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். ஏப்ரல் மாதம் போடப்பட்ட ஒப்பந்தத்தில் அனைவரையும் கையெழுத்திட செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் எதுவும் இதுவரை நடக்கவில்லை. எனவே சினிமாவை டிஜிட்டல் முறையில் திரையிடும் நடவடிக்கைகளை அரசே எடுத்துக்கொள்ளலாம், அதன் மூலம் டாஸ்மாக் வருமானத்தை விட அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்ற ஒரு கருத்தையும் அரசிடம் திரையுலகினர் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்