‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படத்தில் நடித்த ஆடு திருட்டு

சென்னை வளசரவாக்கத்தில் ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படத்தில் நடித்த ஆடு திருடப்பட்டது. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

Update: 2018-07-12 21:30 GMT
பூந்தமல்லி,

சென்னை வளசரவாக்கம், அன்பு நகரை சேர்ந்தவர் வீரசமர். இவர் கொம்பன், மருது, இன்று வெளியாகும் ‘கடைக்குட்டி சிங்கம்’ உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இவரது வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக வளர்த்து வந்த ஆட்டை நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.

இதுகுறித்து கோயம்பேடு போலீசில் வீரசமர் புகார் அளித்தார். போலீசார் இதுபற்றி விசாரணை செய்து வருகின்றனர். கலை இயக்குனர் வீரசமர் கூறியதாவது.

கடந்த சில ஆண்டுகளாக கம்பீரமான ஆடு ஒன்றை டைசன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தேன். வீட்டிற்கு வெளியே ஒரு செட் அமைத்து அங்குதான் அது வளர்ந்துவந்தது. தற்போது அந்த ஆட்டை மர்மநபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இந்த ஆடு நடிகர் கார்த்தி நடித்து இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகும் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்துள்ளது.

அது யார் வந்தாலும் முட்டித் தள்ளிவிடும். 2 பேர் சேர்ந்தாலும் அந்த ஆட்டை பிடிக்க முடியாது. மர்மநபர்கள் சிலர் நள்ளிரவில் ஆட்டுக்கு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தூக்கிச் சென்றுள்ளனர். இந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த போது, பால் வண்டி போல் ஒரு வாகனம் வருவதும், நீண்ட நேரம் கழித்து அந்த வாகனம் இங்கிருந்து செல்வதும் பதிவாகி உள்ளது. இதுபற்றியும் போலீசாருக்கு தெரிவித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கனவே மதுரவாயலில் காரில் வந்து ஆட்டை திருடியதாக 2 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்