சினிமா செய்திகள்
சாணக்கியர் வேடத்தில் அஜய்தேவ்கான்

சரித்திர, புராண கதைகள் அதிகமாக படமாகின்றன. மகாபாரதம், ராமாயணம் பெரிய பட்ஜெட்டில் தயாராகிறது.
ராணிபத்மினி வாழ்க்கை ‘பத்மாவத்’ பெயரில் ஏற்கனவே படமாக வந்தது. ராணி லட்சுமிபாய் வாழ்க்கையையும் கங்கனா ரணாவத் நடிக்க படமாக எடுக்கின்றனர். இப்போது இந்திய சரித்திர காலத்தில் புகழ் பெற்றவராக வாழ்ந்த சாணக்கியர் வாழ்க்கையும் படமாகிறது.

சாணக்கியர் அரசியல் சிந்தனையாளர், பொருளாதார நிபுணர், அரசியல் ஆலோசகர் என்று பன்முக திறன் கொண்டவர். அவரது வாழ்க்கை வரலாற்றை பிரபல இயக்குனர் நீரஜ் பாண்டே படமாக எடுக்கிறார். இவர் ரஸ்டம், பேபி, எம்.எஸ்.டோனி, ஸ்பெ‌ஷல் 26 போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர்.  இந்த படம் இந்தி உள்ளிட்ட சில மொழிகளில் தயாராகிறது. சாணக்கியரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் அவரது வேடத்தில் நடிக்க அஜய்தேவ்கான் தேர்வாகி இருக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.

இந்த படத்தில் நடிப்பது குறித்து அஜய்தேவ்கான் கூறும்போது, ‘‘சாணக்கியர் கதாபாத்திரத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று ஆவலோடு காத்திருக்கிறேன். நீரஜ் பாண்டே சிறந்த டைரக்டர். அவரது படங்கள் அனைத்தையும் பார்த்து இருக்கிறேன். சாணக்கியர் படத்தையும் அழுத்தமாகவும் தெளிவாகவும் எடுத்து மக்களிடம் சேர்ப்பார் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.

நீரஜ் பாண்டே கூறும்போது, ’’அஜய்தேவ்கானை சாணக்கியராக மக்கள் ஏற்பார்கள்’’ என்றார்.