சினிமா செய்திகள்
குருவியார் கேள்வி-பதில்கள்

உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
குருவியாரே, அனுஷ்கா பார்ட்டி மற்றும் டின்னருக்கு போவதில்லை என்கிறாரே, நம்பலாமா...? (பி.சாய் விக்னேஷ், சென்னை–18)

பார்ட்டியும், டின்னரும் சிலருக்கு அலர்ஜி. அந்த வரிசையில் இருக்கிறார், அனுஷ்கா. படத்தில் ஆடுவதுடன் சரி... பார்ட்டிக்கு போய் அவர் ஆடுவதில்லை.

***

சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகிய இரண்டு பேரில் அதிக சம்பளம் வாங்குபவர் யார்? (ஆர்.புவனேஷ், பெரியகுளம்)

சிவகார்த்திகேயன்! இரண்டு பேரின் சம்பளத்துக்கும் ஏற்ற–இறக்கம் சாஸ்தி!

***

குருவியாரே, இயக்குனர்கள் எல்லாம் நடிக்க ஆரம்பித்து விட்டார்களே...ஏன்? (இரா.ரெங்கசாமி, வடுகப்பட்டி)

‘‘எங்களுக்கும் நடிக்க தெரியும்’’ என்று காண்பிக்கத்தான்...! நடிக்க தெரிந்திருந்தும் அய்யோ பாவம் என்று விட்டுக் கொடுக்கிறோம்...என்பதை உணர்த்துவதற்கும்!

***

பிரபல கதாநாயகன் மோகன் நடித்த பாடல் காட்சிகளில் இன்னும் மனதை விட்டு நீங்காத பாடல் காட்சி எது? அந்த பாடல் காட்சி இடம் பெற்ற படம் எது? (பி.எம்.ரங்கராஜன், ஓசூர்)

‘‘நிலாவே வா...செல்லாதே வா...’’ இந்த பாடல் காட்சி இடம் பெற்ற படம், ‘மவுன ராகம்.’

***

மறைந்த நடிகர் ஜெய்சங்கருக்கு பொருத்தமான ஜோடி என்று பேசப்பட்ட கதாநாயகி யார்? (டி.ஆர்.சந்தோஷ், காட்பாடி)

எல்.விஜயலட்சுமி! ஆரம்ப காலத்தில் ஜெய்சங்கருக்கு ஜோடியாக பல படங்களில் நடித்தவர் இவர்தான்!

***

குருவியாரே, ஆர்யாவுக்கு முன்பு அவருடைய தம்பி திருமணம் செய்து கொண்டாரே...இருவருக்கும் பின்னால் ஒரு கதை இருக்கும் போலிருக்கிறதே...அதை படம் எடுத்தால், படத்துக்கு என்ன பெயர் சூட்டலாம்? (கே.அன்வர்பாட்ஷா, அரக்கோணம்)

‘அவசரப்பட்ட தம்பியும், ஆறப்போட்ட அண்ணனும்...’

***

‘‘மாட்டுக்கார வேலா உன் மாட்டை கொஞ்சம் பார்த்துக்கோடா...’’ என்று சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடல் இடம் பெற்ற படம் எது? பாடல் காட்சியில் நடித்தவர் யார்? (இ.ஜெயராமன், ஸ்ரீவைகுண்டம்)

அந்த பாடல் இடம் பெற்ற படம், ‘வண்ணக்கிளி.’ பாடல் காட்சியில் நடித்தவர், பிரேம்நசீர்!

***

குருவியாரே, நயன்தாரா, ஹன்சிகாவை அடுத்து சிம்புவின் பார்வை இப்போது யார் மீது திரும்பியிருக்கிறது? (ரவுச்சந்திரன், ஆவுடையாள்புரம்)

சிம்புவின் பார்வை இப்போது அனுஷ்கா பக்கம் திரும்பியிருக்கிறதாம். ‘‘நான், அனுஷ்காவின் ரசிகர்’’ என்று கூறி வருகிறார்!

***

இந்தி பட உலகில் எந்த கதாநாயகிகள் இடையே போட்டி கடுமையாக இருக்கிறது? (வி.சத்யமூர்த்தி, கடலூர்)

டாப்சிக்கும், எமிஜாக்சனுக்கும் இப்போது போட்டி கடுமையாக இருந்து வருகிறது!

***

குருவியாரே, கமல்ஹாசனின் ‘சபாஷ் நாயுடு’ படம் எந்த நிலையில் உள்ளது? (மகாதேவ், பெங்களூரு)

‘சபாஷ் நாயுடு,’ முக்கால்வாசி படம் முடிவடைந்தது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற இருக்கிறது!

***

இப்போதெல்லாம் வருடத்துக்கு 300 படங்கள் திரைக்கு வருகின்றன. அதில், ஒரு சில படங்களே வெற்றி பெறுகின்றன. என்றாலும் பட தயாரிப்பு எண்ணிக்கை குறையவில்லை. இதற்கு என்ன காரணம்? (மணிகண்டன், திருப்பூர்)

குறைந்த செலவில் படம் எடுத்துவிடக்கூடிய ‘டிஜிட்டல் கேமராக்கள்’தான் காரணம். யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம் என்று ‘டிஜிட்டல் கேமராக்கள்,’ திரையுலக கதவுகளை திறந்து விட்டுள்ளன. பட தயாரிப்பு எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு இதுவே காரணம்!

***

குருவியாரே, அஜித்குமார், சிவகார்த்திகேயன் ஆகிய இருவருக்கும் சினிமா பின்னணி இருக்கிறதா? யார் மூலம் திரையுலகில் நுழைந்தார்கள்? (ஆர்.ரவீந்திரன், கோபிச்செட்டிப்பாளையம்)

இரண்டு பேருமே எந்த பின்புலமும் இல்லாமல் திரையுலகுக்கு வந்தவர்கள். இருவரும் கொண்டாடப்படுவதற்கு பல காரணங்கள். அதில், இதுவும் ஒன்று!

***

நடிகை கவுதமி மீண்டும் சினிமாவில் நடிப்பாரா? (ஆர்.கோவிந்தராஜ், பூந்தமல்லி)

அவர், ‘‘மாட்டேன்’’ என்று சொல்லவில்லையே...பொருத்தமான கதாபாத்திரம் வந்தால் நடிக்க தயாராக இருப்பதாக கவுதமி கூறுகிறார்!

***

குருவியாரே, வடிவேல் சொந்த படம் தயாரிப்பாரா? (எஸ்.சுபலட்சுமி, சென்னை–92)

சொந்த படம் தயாரித்த சிலரின் அனுபவங்களை வடிவேல் நேரில் பார்த்து இருக்கிறார். அதனால் அவர் உஷாராகி விட்டார்!

***

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு பண கஷ்டம் ஏற்பட என்ன காரணம்? அவருடைய கணவர் போனிகபூர் கடனாளி ஆனது எப்படி? ஸ்ரீதேவி மீண்டும் நடிக்க ஆரம்பித்தது ஏன்? (பி.சண்முகராஜ், காஞ்சிபுரம்)

ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் பட தயாரிப்பில் ஈடுபட்டதுதான் காரணம் என்கிறார்கள். அவர் தயாரித்த சில இந்தி படங்கள் வரிசையாக தோல்வியை தழுவியதால், போனிகபூர் கடனாளி ஆனார். கணவரின் கடன்களை அடைப்பதற்கு ஸ்ரீதேவி மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்!

***

குருவியாரே, நிவேதா பெத்துராஜ் துபாயில் வளர்ந்தவர் என்று கூறப்படுகிறதே...அது உண்மையா? அவர் இதுவரை நடித்த படங்கள் என்னென்ன? (சி.ராஜதுரை, வள்ளியூர்)

உண்மைதான். அவருடைய பூர்வீகம், மதுரை. வளர்ந்தது, படித்தது எல்லாம் துபாயில்...அவர் இதுவரை நடித்த படங்கள்: ஒருநாள் கூத்து, பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக்!

***

சி.பி.ஐ. அதிகாரியாக நயன்தாரா நடித்து வரும் படத்தின் பெயர் என்ன? (கே.சதீஷ்குமார், அரியலூர்)

‘இமைக்கா நொடிகள்!’

***

குருவியாரே, கார்த்திக்கும், அவருடைய மகன் கவுதம் கார்த்திக்கும் இணைந்து நடித்த ‘மிஸ்டர் சந்திரமவுலி’ படம் வெற்றி பெற்று இருக்கிறதே...இருவரும் மறுபடியும் ஒரு படத்தில் இணைவார்களா? (ப.கதிரேசன், உளுந்தூர்பேட்டை)

‘மிஸ்டர் சந்திரமவுலி’ வெற்றி பெற்று இருப்பதால், கார்த்திக்–கவுதம் கார்த்திக் இரண்டு பேரையும் வைத்து படம் தயாரிக்க நிறைய தயாரிப்பாளர்கள் வரிசை கட்டி நிற்பதாக ஒரு தகவல் பரவியிருக்கிறது. அடுத்து அப்பா–மகன் இருவரும் உடனடியாக இணைந்து நடிப்பதை விரும்பவில்லையாம். சில வருட இடைவெளி விட்டு, அப்புறம் இணைந்து பணிபுரிவார்களாம்!

***

நயன்தாரா அறிமுகமான தமிழ் படம் எது? அந்த வாய்ப்பு கிடைப்பதற்கு முன், அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? (எஸ்.பாலாஜி, காஞ்சீபுரம்)

நயன்தாரா அறிமுகமான தமிழ் படம், ‘ஐயா.’ அந்த வாய்ப்பு கிடைப்பதற்கு முன், அவர் சில மலையாள படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். மலையாள படங்களில் நடித்துக் கொண்டே தமிழ் படங்களில் நடிப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்!

***

குருவியாரே, நாகேஷ் கதாநாயகனாக நடித்த ‘தேன் கிண்ணம்’ படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்தவர் யார்? (வி.மைதீன் பாட்ஷா, கோட்டாறு)

‘தேன்கிண்ணம்’ படத்தில் நாகேஷ் ஜோடியாக நடித்தவர், பழைய கவர்ச்சி நடிகை விஜயலலிதா!

***

‘‘எனக்கொரு மகன் பிறப்பான்...அவன் என்னைப் போலவே இருப்பான்...’’ என்ற பாடல் இடம் பெற்ற படம் எது, அந்த படத்தை இயக்கியவர் யார்? (எம்.மதிவாணன், மதுரவாயல்)

அந்த பாடல் இடம் பெற்ற படம், ‘பணம் படைத்தவன்.’ எம்.ஜி.ஆர். நடித்த அந்த படத்தை இயக்கியவர், டி.ஆர்.ராமண்ணா!