நிரந்தர அழகைப் பெற என்ன செய்ய வேண்டும்? (ஹேமமாலினி சொல்லும் கவர்ச்சி ரகசியம்)

வயதை மீறிய வனப்புடன் காட்சியளிக்கும் நடிகை ஹேமமாலினி அழகுக்கும்- ஆத்மாவுக்கும் உள்ள தொடர்பையும், தனது கவர்ச்சியின் ரகசியத்தையும் வெளிப்படையாக சொல்கிறார்.

Update: 2018-07-15 05:07 GMT
யதை மீறிய வனப்புடன் காட்சியளிக்கும் நடிகை ஹேமமாலினி அழகுக்கும்- ஆத்மாவுக்கும் உள்ள தொடர்பையும், தனது கவர்ச்சியின் ரகசியத்தையும் வெளிப்படையாக சொல்கிறார்:

“அழகு என்பது அனைவருக்கும் பொதுவானது. இறைவன் அனைவரையும் அழகாகத் தான் படைத்திருக்கிறார். இந்த உண்மையை எல்லோரும் புரிந்துகொள்வதில்லை. என்னிடம் பலரும் ‘உங்கள் அழகின் ரகசியம் என்ன?’ என்று கேட்கிறார்கள். இறைவன் ஏதோ என்னை மட்டும் தனிப்பட்ட முறையில் அழகாக படைத்து விட்டதைப்போல நினைக்கிறார்கள். நாம் ஒவ்வொருவரும் அழகுதான்.

அழகு என்பது மனதில் இருந்து வெளிப்படுவது. மனதை எப்போதும் தூய்மையாக வைத்துக்கொள்ள பழக வேண்டும். நான் காலையில் எழுந்ததும் தியானம் செய்கிறேன். இது என்னை இறைவனோடு ஐக்கியப்படுத்திக்கொள்ள உதவுகிறது. தெளிந்த சிந்தனைகளை தூண்டி எனக்குள் ஒரு மகிழ்ச்சியையும், தன்னம்பிக்கையையும் வளர்க்க தியானம் உதவு கிறது. பிரபஞ்சத்தோடு நம் ஆன்மா ஐக்கியமாகும்போது கிடைக்கும் பலம் அளவிடமுடியாதது. பின்பு உடலை பலப்படுத்த யோகாசனம் செய்கிறேன்.

உடல் என்பது நம் ஆன்மாவின் இருப்பிடம். அதனால் அதை பாதுகாக்க வேண்டியது நம் கடமை. அடுத்து நாட்டிய பயிற்சி மேற்கொள்கிறேன். நாட்டியம், என் ஆன்மாவோடு இணைந்த விஷயம். அது சிறந்த உடற்பயிற்சியுமாகும். என் உடலை அழகாக வைத்துக்கொள்ள எனக்கு தியானம், யோகாசனம், நாட்டியம் ஆகிய மூன்றும் உதவுகிறது.

இயற்கையாகவே எல்லோரும் அழகாக இருந்்தாலும், அந்த அழகை பாதுகாத்து பராமரிக்க முயற்சி செய்வது ஒரு சிலர் மட்டுமே. சினிமா நட்சத்திரங்கள் அழகை பாதுகாத்துக் கொள்ள பெரும் முயற்சி எடுத்துக் கொள்கிறார்கள் என்று பலரும் நினைக் கிறார்கள். அது உண்மைதான். ஆனால் அதே முயற்சியை மேற்கொள்ளும் அனைவரும் அந்த பயனை அடைகிறார்கள். அழகு என்பது நமக்கு ஒரு பலம். அது நமது தன்னம்பிக்கை. இது அனைவருக்கும் தேவை.

‘கனவுக் கன்னி’ என்று ரசிகர்கள் எனக்கு பட்டம் கொடுத்தார்கள். அதனால் மகிழ்ச்சியடைந்த அதேநேரம் கொஞ்சம் கலக்கமாகவும் இருந்தது. அந்தப் பட்டத்தை எதுவரை காப்பாற்ற முடியும்? என்ற கேள்வி தான் கலக்கத்திற்கு காரணம். அதனால் அழகை பாதுகாத்துக்கொள்ள பல இயற்கை வழிகளை கையாண்டேன். எல்லாமே எளிய வழிகள் தான்.

இயற்கையே எப்போதும் பாதுகாப்பானது, எளிமையானது. அனைவரும் பின்பற்றக் கூடியதாகத் தான் அது இருக்கும். சரும அழகை பாதுகாத்துக்கொள்ள தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். உடலில் உள்ள நச்சுப் பொருட்கள், ரசாயனப் பொருட்கள் தண்ணீரில் கலந்து வெளிவந்து விடும். வறண்ட சருமத்திற்கு எண்ணெய் மசாஜ் செய்வது நல்லது. குளிர்ந்த பழரசங்கள் உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும். அதிக முடி உதிர்தல், சரும நோய் பாதிப்புகளுக்கு உடலின் உஷ்ணமே காரணம். அடிக்கடி கோபப்படுவது, டென்ஷனாவது அனைத்தும் உடலின் உஷ்ணத்தை அதிகப்படுத்தி பலவித பாதிப்புகளுக்கு நம்மை உள்ளாக்குகிறது. இவை எல்லாம்கூட அழகுக் குறிப்புகள் தான்.

இன்றைய இளைஞர்களான ஆண்களும், பெண்களும் மாறுபட்ட உணவுப் பழக்கங் களால் உடலை சீரழித்துக் கொள்கிறார்கள். உடலுக்கு வலிமையைத் தருவது, சக்தி யளிப்பது உணவு தான். அதே உணவை முறையற்ற விதத்தில் உட்கொண்டால் அது உடலில் பல மாறுபாடுகளையும், பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துகிறது. அப்போது உடல் எடை கூடுகிறது. பலவிதமான வயிற்றுப்பிரச்சினைகள் ஏற்படுகிறது. பழக்கமில்லாத புதுவித உணவுவகைகளை வயிற்றில் திணித்து வயிற்றைப் பாடாய் படுத்துகிறார்கள். அதனால் ஜீரண மண்டலமே ஸ்தம்பித்து விடுகிறது. உடலின் உள்ளுறுப்பு களின் பாதிப்பு வெளி அழகையும் பாதிக்கும்.

இன்று மூலைக்கு மூலை அழகு நிலையங்கள் வந்துவிட்டன. ஆண்களும், பெண்களும் அழகான தோற்றத்திற்காக அங்கே சரணடைகிறார்கள். உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் பாதுகாக்க முடியாமல் திண்டாடும் இன்றைய இளைஞர்களுக்கு அழகு நிலையங்களால் என்ன உதவி செய்ய முடியும்? அழகு சாதனப் பொருட்கள் எல்லாம் ஒரு மாயை. இயற்கை அழகு தான் எப்போதும் நிரந்தரம். அதனை பாதுகாக்க முயற்சி எடுக்க வேண்டும். தவறான உணவுப்பழக்கங்களிலிருந்து வெளிவர வேண்டும்.

மனதை எப்போதும் பாசிடிவ் எனர்ஜியுடன் வைத்துக்கொள்ள வேண்டும். அது தான் மகிழ்ச்சி. மகிழ்ச்சியால் கிடைக்கக் கூடியதுதான் சக்தி. இந்த சக்தி உங்களை முன்னேற்றப்பாதையில் வழிநடத்திச் செல்லும். அந்த மகிழ்ச்சி மலர்ச்சியாக முகத்தில் தெரியும். அதுதான் உண்மையான அழகு. அனை வரையும் வசீகரிக்கும் அழகு. உங்களை சுற்றிப் பல புதுமைகளை படைக்கும் அழகு.

தியானம் என்பது நம் ஆன்மாவின் அழகு சாதனப் பொருள். தியானம் நம்மை பிரபஞ்சத்தோடு இணைந்து நம் ஆசைகளை நிறைவேற்றுகிறது. வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறுகிறது. அந்த மகிழ்ச்சி தான் நம் பலம்.

இன்றைய மனிதர்கள் வாழும் இயந்திர வாழ்க்கையில் இருந்து சற்று விலகி வந்து வாழ்ந்து பாருங்கள். நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியை தொலைத்திருக் கிறீர்கள் என்பது புரியும். நம் ஆன்மாவிற்கு கொஞ்சம் ரிலாக்ஸ் தேவை. நம் உடல் ஆன்மாவை தாங்கும் கோவில். நவநாகரிகம் என்ற பெயரில் தேவையற்ற பழக்கவழக்கங்களால் உடலை பாழடித்துக் கொண்டிருக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள். போதைப் பழக்கம் மன அமைதியை குலைத்து உடலுக்கு கேடு விளைவிக்கும். அது, நாம் உயிரோடு இருக்கும் போதே நம் ஆன்மாவை நம்மிடமிருந்து பிரித்து விடும். மனித வாழ்க்கைக்கு போதை தேவையே இல்லை.

அழகு என்பது ஆன்மாவின் வெளிப்பாடு. பாசிடிவ் எனர்ஜி நம்மை அழகாக வைத்துக் கொள்ளும். ஆனால் அதை பலரும் நம்புவது கஷ்டம். ஆனால் அது தான் உண்மை. மன ஆரோக்கியமும், உடல் ஆரோக்கியமும் இணைந்தது தான் முக அழகு, இளமை எல்லாம்! மனதையும், உடலையும் தூய்மையாகவும், பலமாகவும் வைத்துக் கொள்ளுங்கள். வைத்துக்கொண்டால், வெகுகாலம் நீங்கள் அழகுடன் திகழலாம். இதுதான் அழகின் ரகசியம்” என்று கூறுகிறார், ஹேமமாலினி.

இதை பின்பற்றினால் எல்லோராலும் அழகுடன் ஜொலிக்க முடியும்!

மேலும் செய்திகள்