சன்னி லியோனுக்கு சீக்கியர் அமைப்பு எதிர்ப்பு

ஆபாச படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர் சன்னிலியோன். இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

Update: 2018-07-15 22:30 GMT
சன்னிலியோன் தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். இப்போது ‘வீரமாதேவி’ என்ற பெயரில் தமிழில் தயாராகும் சரித்திர படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

சன்னிலியோனின் இயற்பெயர் கரன்ஜித் கவுர் வோரா. அவரது வாழ்க்கையை ‘கரன்ஜித் கவுர்: த அண்டோல்டு ஸ்டோரி ஆப் சன்னிலியோன்’ என்ற பெயரில் தொடராக தயாரித்து உள்ளனர். இந்த தொடர் இணையதளத்தில் வெளியாகிறது. சன்னிலியோனின் இளம்வயது வாழ்க்கை போராட்டங்கள், பாலியல் தொழிலுக்கு வந்த சூழ்நிலைகள், சினிமாவில் அறிமுகமானது உள்ளிட்ட வி‌ஷயங்கள் இந்த தொடரில் இடம்பெற்று உள்ளன. இந்த நிலையில் கவுர் பெயரை சன்னிலியோன் பயன்படுத்த சீக்கிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. சீக்கிய பெண்கள் அமைப்பும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

சீக்கிய அமைப்பின் செய்தி தொடர்பாளர் தில்ஜித் சிங் பேடி கூறும்போது, ‘‘கவுர் என்பது சீக்கிய குருவால் சீக்கிய பெண்களுக்கு வழங்கப்பட்ட மரியாதையான பெயர். சீக்கிய போதனைகளை பின்பற்றாதவர்கள் யாரும் இந்த பெயரை பயன்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம். மீறி பயன்படுத்தினால் சீக்கிய மத உணர்வுகளை புண்படுத்துவதாக ஆகும். எனவே சன்னிலியோன், கவுர் பெயரை பயன்படுத்தக்கூடாது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

ஆனாலும் எதிர்ப்பை மீறி சன்னிலியோன் வாழ்க்கை தொடரை இன்று முதல் இணையதளத்தில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்