சினிமா செய்திகள்
‘சர்கார்’ படத்தில் சுந்தர் பிச்சை வேடத்தில் விஜய்?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு ‘சர்கார்’ என்று பெயரிட்டு உள்ளனர்.
சர்கார் என்பது அரசாங்கத்தை குறிக்கும் என்பதால் இது அரசியல் படமாக இருக்கலாம் என்று பேசப்பட்டு வந்தது. ஆனால் படத்தில் விஜய் கோட்டு சூட்டுடன் ஸ்டைலாக இருப்பது போன்றும், வெளிநாட்டில் சொகுசு காரில் லேப்டாப்புடன் பயணிப்பதுபோன்றும் முதல் தோற்றம் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

தற்போது சுந்தர் பிச்சை வேடத்தில் அவர் நடிப்பதாக தகவல் பரவி இருக்கிறது. சுந்தர் பிச்சை சென்னையில் பிறந்து இங்கேயே கல்வி கற்று கூகுள் நிறுவனத்தில் முதன்மை தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்து இருக்கிறார். கூகுள் நிறுவன பங்குகள் மதிப்பு அதிகரித்ததால் இவரது சம்பளமும் ரூ.2,500 கோடியாக உயர்ந்தது.

உலக அளவில் தமிழர்களின் அடையாளமாகவும் பேசப்படுகிறார். விஜய்யின் முந்தைய மெர்சல் படத்தில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழன் பாடல் தமிழர்கள் பெருமை பேசும் பாடலாக அமைந்தது. அதன் தொடர்ச்சியாகவே சுந்தர் பிச்சை கதாபாத்திரத்தை மையமாக வைத்து சர்கார் திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளது என்கின்றனர். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்துள்ளது.

அங்கு பெரிய நிறுவனத்தில் சுந்தர் பிச்சைபோல் தொழில் நுட்ப வல்லுனராக இருக்கும் விஜய் சென்னை திரும்புகிறார். அப்போது விவசாயிகள் வேதனைகளையும் சுயநல அரசியல்வாதிகள், ஊழல்வாதிகள் பிடியில் சிக்கி மக்கள் கஷ்டப்படுவதையும் பார்த்து கொதித்துபோய் அவர்களுக்கு எதிரான போராட்டத்தில் இறங்குவதுபோல் திரைக்கதை அமைத்து உள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் இதனை படக்குழுவினர் உறுதிபடுத்தவில்லை.