சினிமா செய்திகள்
‘‘எனக்கு விரைவில் திருமணம்’’ –பிரியங்கா சோப்ரா

நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவும் அமெரிக்காவை சேர்ந்த பாப் பாடகர் நிக் ஜோனசும் காதலிக்கின்றனர். பிரியங்கா சோப்ராவுக்கு 35 வயது ஆகிறது. நிக் ஜோனசுக்கு 25 வயது. இவர்கள் காதலை இரு வீட்டிலும் ஏற்றுக் கொண்டனர். இதனால் பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக பங்கேற்று வருகிறார்கள். 

சமீபத்தில் நிக் ஜோனஸை மும்பைக்கு அழைத்து வந்து தனது குடும்பத்தினரிடம் பிரியங்கா சோப்ரா அறிமுகம் செய்து வைத்தார். இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சல்மான்கான் ஜோடியாக புதிய படமொன்றில் நடிக்க பிரியங்கா சோப்ராவை ஒப்பந்தம் செய்துள்ளனர். 

இந்த படத்துக்கு அவர் ரூ.13 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல். திருமணம் குறித்து பிரியங்கா சோப்ரா கூறியதாவது:–

‘‘எனக்கு திருமணத்தில் நம்பிக்கை உள்ளது. விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளேன். திருமணம் என்பது பெண்ணியவாத கருத்துக்களுக்கு எதிரானது அல்ல. எனது கொள்கை நிலைப்பாடுகளுக்கு திருமணம் இடையூறாக இருக்காது என்று நினைக்கிறேன். 

பெண்களுக்கு என்று சொந்த விருப்பங்கள் இருக்கின்றன. அதில் யாரும் குறுக்கிட கூடாது. யாராவது ஒருவர் நம்மை அக்கறையுடன் கவனித்துக்கொண்டால் அவர் கள் நமக்கு விசே‌ஷமானவராகவும் முக்கியமானவராகவும் தெரிவார். நான் மகிழ்ச்சியாக இருக்கும்போது என்னை அழகாக உணர்கிறேன். நான் அதிர்ஷ்டசாலி. வாழ்க்கை யில் எனக்கு பிடித்த வி‌ஷயங்களே நடக்கின்றன.’’

இவ்வாறு பிரியங்கா சோப்ரா கூறினார்.