சினிமா செய்திகள்
35 வயதை தாண்டியும் அழகாக இருக்கும் ரகசியம் –நடிகை அனுஷ்கா

அழகு என்பது உள்ளத்தில் இருந்து வரவேண்டும். வெளியே அதை உருவாக்க முடியாது என்று நடிகை அனுஷ்கா கூறியுள்ளார்.
நடிகை அனுஷ்காவுக்கு 36 வயது ஆகிறது. திருமணத்துக்கு பெற்றோர்கள் மாப்பிள்ளை தேடியும் இன்னும் அமையவில்லை. திருமண தடைக்கு ஜாதகத்தில் தோ‌ஷம் இருப்பதாக ஜோதிடர்கள் கணித்ததால் கோவில்களுக்கு சென்று பூஜைகள் செய்து வருகிறார். புதிய படங்களும் அவருக்கு இல்லை.  இந்த வயதிலும் அழகு குறையாமல் இருப்பது குறித்து அனுஷ்காவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–

‘‘உடம்புக்கும் மனதுக்கும் இடையே ஒற்றுமை இருந்தால் அழகு வி‌ஷயத்தில் அற்புதங்கள் நடக்கும். அழகு என்பது உள்ளத்தில் இருந்து வரவேண்டும். வெளியே அதை உருவாக்க முடியாது. இந்த ரகசியங்களை நான் தெரிந்து வைத்து இருப்பதால் என்னை அழகாக வைத்து இருக்க முடிகிறது.  வயது ஏறுவதில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது. வயது ஏறிக்கொண்டு போகிறதே என்று கவலைப்படக்கூடாது. வயது என்பது ஒரு எண்ணிக்கைதான். அதை சந்தோ‌ஷமாக நகர்த்தினால் வயது முதிர்வின் தாக்கம் நம்மீது விழாது. ஓய்வு கிடைக்கும்போது வேறு வேலைகளில் ஈடுபடாமல் ஓய்வாகவே இருப்பேன். அப்போது தனிமையைத்தான் விரும்புவேன். என்னைப்பற்றி சிந்திப்பேன். 

ஏதேனும் தவறுகளை என்னை அறியாமல் செய்து இருந்தால் அது நினைவுக்கு வரும். அந்த தவறை மீண்டும் செய்யாமல் திருத்திக்கொள்ள தெளிவு கிடைக்கும். மனதுக்கு அமைதியும் கிடைக்கும். இப்போது படங்களில் நடிக்காமல் இருப்பதும் நானாக எடுத்த முடிவுதான். உடம்புக்கும் மனதுக்கும் ஓய்வு தேவைப்படுவதால் புதிய படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறேன். இந்த ஓய்வை சந்தோ‌ஷமாக அனுபவிக்கிறேன்.’’

இவ்வாறு அனுஷ்கா கூறினார்.