சினிமா செய்திகள்
அடுத்த மாதம் 19–ந் தேதி நடிகர் சங்க பொதுக்குழு கூடுகிறது

நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தை ஆகஸ்டு 19–ந் தேதி நடத்த முடிவு செய்துள்ளனர்.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 2015–ல் தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்தனர். இவர்கள் பதவி காலம் 3 ஆண்டுகள் என்பதால் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தல் தேதியை முடிவு செய்ய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 19–ந் தேதி நடத்த முடிவு செய்துள்ளனர். 

சென்னை கலைவாணர் அரங்கில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு கடிதங்கள் அனுப்பப்பட உள்ளன. அக்டோபர் மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது. தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக தற்போதைய சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால் ஏற்கனவே அறிவித்து உள்ளார். 

அவரது அணியை எதிர்த்து போட்டியிட ராதாரவி, ஜே.கே.ரித்திஷ் ஆகியோர் புதிய அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இருதரப்பினரும் நாடக நடிகர்களிடம் ஆதரவு திரட்டும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள். சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக உள்ள 19 கிரவுண்ட் நிலத்தில் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டும் வேலைகள் இரவு–பகலாக நடந்து வருகின்றன. 

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் கட்டுமான பணி தொடங்கியது. தரைதளத்துக்கான வேலைகள் முடிந்து முதல் மாடி கட்டப்பட்டு வருகிறது. 3 மாடி கட்டிடமாக இது உருவாகிறது. செப்டம்பர் மாதத்துக்குள் கட்டிடத்தை கட்டி முடிக்க திட்டமிட்டு உள்ளனர். இந்த கட்டிடத்தில் 1000 பேர் அமரக்கூடிய அரங்கம், சிறிய கல்யாண மண்டபம், பிரிவியூ தியேட்டர், கருத்தரங்க கூடம், சங்க அலுவலகம், உடற்பயிற்சி கூடம், நடன பயிற்சி கூடம் ஆகியவை அமைய உள்ளன.