சினிமா செய்திகள்
வித்தியாசமான வேடங்களில் விஜய்சேதுபதி

விஜய் சேதுபதி வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.
பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா, ஆரஞ்சு மிட்டாய், நானும் ரவுடிதான், சேதுபதி, தர்ம துரை, விக்ரம் வேதா ஆகிய படங்கள் அவரது திறைமையை வெளிப்படுத்தின. 

ஜுங்கா படத்தில் கஞ்சத்தனமான தாதாவாக வருகிறார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஷில்பா என்ற பெயரில் திருநங்கையாக நடிக்கிறார். பஹத்பாசில், சமந்தாவும் இதில் உள்ளனர். தியாகராஜன் குமார ராஜா டைரக்டு செய்துள்ளார். படவேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. விஜய் சேதுபதியின் திருநங்கை வேடம் சமூக வலைத்தளங்களில் பரவி படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதுபோல் சீதக்காதி படத்தில் 80 வயது முதியவராக நடிக்கிறார். மகேந்திரன், பார்வதி, காயத்ரி, அர்ச்சனா ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். விஜய் சேதுபதியை வயதான தோற்றத்துக்கு மாற்ற மேக்கப் போடும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை பாலாஜி தரணிதரன் டைரக்டு செய்கிறார். 

அவர் கூறும்போது, ‘‘கதைக்கு 80 வயது நிரம்பிய ஒருவர் தேவைப்பட்டார். அதில் நானே நடிக்கிறேன் என்று விஜய் சேதுபதி முன்வந்தார். அதற்கேற்ப அவரை மாற்றினோம். ஆஸ்கர் விருது பெற்ற கலைஞர்கள் அவருக்கு மேக்கப் போட்டனர். அந்த மேக்கப்புக்கு தினமும் 5 மணிநேரம் தேவைப்பட்டது. மேக்கப்பை கலைக்க 2 மணிநேரம் ஆனது’’ என்றார்.