சினிமா செய்திகள்
பவன் கல்யாண் ரசிகர்கள் மிரட்டுவதால்2–வது திருமணத்தை கோவைக்கு மாற்றிய நடிகை ரேணுதேசாய்

நடிகை ரேணுதேசாய் 2–வது திருமணத்துக்கு தயாராகி உள்ளார்.
தமிழில் பார்த்திபன், பிரபுதேவாவுடன் ‘ஜேம்ஸ் பாண்டு’ படத்தில் நடித்துள்ள ரேணுதேசாய் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாகி நடிகர் பவன் கல்யாணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு இருவருக்கும் கருத்து வேற்பாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தனர். பவன் கல்யாண் இன்னொரு பெண்ணை மணந்து கொண்டார். 

இப்போது ரேணுதேசாயும் 2–வது திருமணத்துக்கு தயாராகி உள்ளார். சமீபத்தில் அவரது நிச்சயதார்த்தம் முடிந்தது. உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் வருங்கால கணவர் பற்றிய விவரங்களை அவர் வெளியிடவில்லை. ஆனாலும் பவன் கல்யாண் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ரேணுதேசாய் 2–வது திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று கொலை மிரட்டல்கள் விடுத்து வருகின்றனர். 

இதனால் டுவிட்டரில் இருந்து வெளியேறிய ரேணுதேசாய் பாதுகாப்பு கருதி திருமணத்தை ஐதராபாத்தில் நடத்தாமல் கோவைக்கு மாற்றி இருக்கிறார். இதுகுறித்து ரேணுதேசாய் கூறியதாவது:–

‘‘எனது திருமணம் வருகிற டிசம்பர் மாதம் கோவையில் உள்ள ஈஷா மையத்தில் எளிமையாக நடைபெறும். அப்போது அன்னதானம் செய்ய இருக்கிறோம். எனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதால் புதிய வாழ்க்கையில் கவனம் செலுத்த முடியவில்லை. வருங்கால கணவரை எனது குழந்தைகள் அகிரா, ஆத்யாவுக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. அவரை தந்தையாக ஏற்றுள்ளனர். 

பவன் கல்யாணும், நானும் ஒருமனதாக விவாகரத்து செய்தோம். அதை அறிக்கையாக வெளியிட அவர் மறுத்து விட்டார். இப்போது அவரது ரசிகர்கள் என்னை மிரட்டியும், திட்டியும் வருகிறார்கள்.

இவ்வாறு ரேணுதேசாய் கூறினார்.