சினிமா செய்திகள்
கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு பாராட்டு தெரிவித்த துணை ஜனாதிபதி

கடைக்குட்டி சிங்கம் படத்தை பார்த்த இந்தியாவின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். #VenkaiahNaidu #KadaikuttySingam
ஐதராபாத்,

நடிகர் சூர்யா தயாரித்து அவரது தம்பி கார்த்தி நடிப்பில் வெளிவந்துள்ள கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் தமிழில் வெற்றி நடை போட்டு வருகிறது. தொடர்ந்து தெலுங்கிலும் இந்த படம் சின்ன பாபு என்ற பெயரில் தயாராகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

குடும்பங்களின் பாசப்போராட்டங்களை எடுத்துரைத்துள்ள இத்திரைப்படத்திற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு படையெடுத்து வருவதால் படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் தெலுங்கு பதிவை இந்திய நாட்டின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளமான டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது, ”சமீபத்தில் தெலுங்கு மொழியில் வெளியான "சின்னபாபு" (தமிழில் "கடைக்குட்டி சிங்கம்") திரைப்படத்தைப் பார்த்தேன். கிராமத்து பசுமை பின்னணியில், நம் பழக்க வழக்கங்களை, மரபுகளை மற்றும் வாழ்க்கை முறையை, ஆபாசம் இல்லாமல் காட்டிய சுவாரசியமான நல்ல படம்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே வெங்கையா நாயுடுவின் பாராட்டிற்கு படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.